கட்டைப்பையில் குழந்தையின் சடலம்.. அரசு மருத்துவமனைகளில் அடுத்தடுத்து அவலம்
Author: Hariharasudhan18 November 2024, 2:26 pm
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளம் குழந்தையின் சடலத்தை கட்டைப் பையில் கொடுத்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், மாரடபள்ளியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கும், ஊத்தங்கரையைச் சேர்ந்த ரம்யா என்ற பெண்ணுக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த நிலையில், ரம்யா கர்ப்பம் ஆகி உள்ளார்.
பின்னர், நிறைமாத கர்ப்பிணியான ரம்யா, பிரசவத்திற்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அப்போது, அவருக்கு ஆண் குழந்தை பிறந்து உள்ளது. ஆனால், குழந்தைக்கு உடல் நலக் குறைவு இருப்பதாக தெரிவித்த மருத்துவர்கள், தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லக் கூறி உள்ளனர்.
இதனையடுத்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்து உள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தையின் இதயம் மற்றும் மூளையில் பாதிப்பு இருப்பதாகக் கூறி உள்ளனர். இதனையடுத்து, கடந்த 5 நாட்களாக அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், குழந்தை இறந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறி உள்ளனர். இதனால் அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் ஆழ, குழந்தையை கட்டப்பையில் கொடுத்து உள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மனம் உடைந்த அவர்கள், மருத்துவமனை வாசலிலேயே சாபமிட்டு வந்து உள்ளனர்.
இதையும் படிங்க: துணை முதலமைச்சரை பார்க்க நிர்வாணமாக சென்ற பெண் அகோரி.. திகைத்து நின்ற தொண்டர்கள்!
இது அங்கிருந்தோரை கண்கலங்கச் செய்து உள்ளது. சமீப காலமாக, பிரசவ நேரத்தின் போது அரசு மருத்துவமனைகளில் தாய் – சேய் இறப்பு ஏற்படும் செய்திகள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அச்சத்துடனே அரசு மருத்துவமனையை அணுகுகின்றனர்.