சியா விதைகளை இந்த மாதிரி சாப்பிட்டால் ஆபத்து நிச்சயம்!!!
Author: Hemalatha Ramkumar19 November 2024, 4:54 pm
தற்போது சியா விதைகள் என்ற சூப்பர் ஃபுட் பற்றி பலரும் தங்களுடைய வீடியோக்கள், ரீல்கள் போன்றவற்றில் பேசுவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஊறவைத்த சியா விதைகள் உடல் எடையை குறைப்பதற்கு தற்போது பிரபலமான ஒரு இயற்கை தீர்வாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிறிய சூப்பர் ஃபுட்கள் உடல் எடை குறைப்பு மற்றும் கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு உதவுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள சியா விதைகள் நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. தினமும் 5 டேபிள்ஸ்பூன் அல்லது 50 கிராம் சியா விதைகள் சாப்பிடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.
நம்முடைய உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடுகளை குறைக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கு உதவுவது மட்டுமல்லாமல் சியா விதைகள் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தவும், எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சியா விதைகளில் நார்ச்சத்து, கால்சியம், ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது நம்முடைய அன்றாட டயட்டிற்கு ஒரு ஊட்டச்சத்து மிகுந்த விதையாக அமைகிறது.
ஆனால் வறண்ட சியா விதைகளை அளவுக்கு அதிகமாக விழுங்குவது மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். மேலும் சியா விதைகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது வயிற்றுப்போக்கு போன்ற உணவு சார்ந்த பிரச்சினைகள் முதல் ரத்த சர்க்கரை அளவுகளை ஆபத்தான நிலைக்கு குறைப்பது வரையிலான கேடுகளை விளைவிக்கிறது. பொதுவாக சியா விதைகள் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்சனையை போக்குவதற்கு பெயர் போனது. ஆனால் வறண்ட விதைகளை சாப்பிடுவதால் நீங்கள் மோசமான பிரச்சனையில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது.
இதையும் படிக்கலாமே: 6-6-6 நடைபயிற்சி விதி… அப்படி என்ன இருக்கு இதுல…???
தண்ணீர் அல்லது வேறு எந்த திரவம் இல்லாமல் சியா விதைகளை நீங்கள் சாப்பிடும் பொழுது இது செரிமான பாதையில் கான்கிரீட் போல ஒட்டிக்கொண்டு அதனால் மூச்சுத் திணறல் ஏற்படலாம். முன்னதாக 2014 ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு அறிக்கையில் ஒரு 39 வயது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட ஒரு ஆண் ஒரு டேபிள் ஸ்பூன் வறண்ட சியா விதைகளை சாப்பிட்ட பிறகு விழுங்குவதில் சிக்கல்களை அனுபவித்ததாக கூறுகிறது. சியா விதைகள் தங்களுடைய எடையில் 27 மடங்கு தண்ணீரை உறிஞ்சுவதற்கான தன்மையை கொண்டுள்ளன.
எனவே ஒருவர் சியா விதைகளை எப்பொழுதும் ஊறவைத்து சாப்பிடுவது நல்லது. அடுத்தபடியாக வறண்ட சியா விதைகளை சாப்பிடும் பொழுது போதுமான அளவு தண்ணீர் பருக்காவிட்டால் அதனால் வயிற்று உப்புசம் மற்றும் அடிவயிற்று வலி ஏற்படலாம். மேலும் இதனால் வயிற்றுப்போக்கு உண்டாவதற்கு வாய்ப்பு உள்ளது.
இது மாதிரியான பிரச்சனைகள் ஏற்படும் போது நீங்கள் உடனடியாக சியா விதைகள் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும். ரத்த சர்க்கரை அளவுகளை கட்டுப்படுத்துவதற்கு சியா விதைகள் ஒரு சிறந்த இயற்கை தீர்வாக இருந்தாலும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ரத்த சர்க்கரையை மோசமாக குறைக்கலாம். மேலும் இது டயாபடீஸ் மருந்துகளின் விளைவுகளோடு குறுக்கிடுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
சியா விதைகள் ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் உதவுகிறது. சியா விதைகளில் காணப்படும் அதிக அளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலம் காரணமாக இது ரத்த கரைப்பானாக செயல்பட்டு ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. எனவே சியா விதைகளை நீங்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது அதனால் உங்களுடைய ரத்த அழுத்தம் ஆபத்தான அளவிற்கு குறையலாம். எனவே சியா விதைகள் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு சூப்பர்ஃபுட்டாக இருந்தாலும் அதனை வறண்ட நிலையிலோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.