ராமேஸ்வரத்தில் பேய் மழை பெய்தது ஏன்? பொதுமக்கள் கடும் அவதி!
Author: Hariharasudhan21 November 2024, 9:53 am
ராமநாதபுரம் பகுதிகளில் ஏற்பட்ட சூப்பர் மேகவெடிப்பு காரணமாக அங்கு அதிகனமழை கொட்டித் தீர்த்ததாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
ராமநாதபுரம்: தமிழகத்தின் தென் மாவட்டங்களான விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய பகுதிகளிலும், டெல்டா பகுதியான திருவாரூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. அதிலும் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று (நவ.20) தென்மாவட்ட மற்றும் டெல்டா பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வந்தது. அதனைத் தொடர்ந்து, பிற்பகலில் விருதுநகர் மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்தது. குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் தாலுகாக்களில் அதிகனமழை கொட்டித் தீர்த்தது.
இதன்படி, நேற்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை ராமேஸ்வரத்தில் 41 செ.மீ, தங்கச்சிமடத்தில் 32 செ.மீ, மண்டபம் 26 செ.மீ, பாம்பன் 23 செ.மீ அளவில் மழை பதிவாகி உள்ளது. தொடர்ந்து, மாலை 5.30 மணி நிலவரப்படி, பாம்பனில் 27 செ.மீ மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
இதையும் படிங்க: 3 பிரபல ஹீரோக்களுடன் நயன்தாரா…வெளிவந்த தகவல்…பரபரப்பில் கோலிவுட் !
மேலும், பிற்பகல் 1 முதல் மாலை 4 மணி வரையிலான 3 மணி நேரத்தில் மட்டும் ராமேஸ்வரத்தில் 36 செ.மீ, தங்கச்சிமடம் 27 செ.மீ, பாம்பன் 19 செ.மீ மற்றும் மண்டபம் பகுதியில் 13 செ.மீ மழை கொட்டித் தீர்த்துள்ளதாக ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது.
அதேநேரம், மிக குறுகிய இடத்தில் உருவான வலுவான மேகக்கூட்டங்கள் காரணமாக ராமேஸ்வரம் பகுதியில் மேகவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலசந்திரன் கூறியுள்ளார். மேலும், இது சூப்பர் மேகவெடிப்பு நிகழ்வாக அமைந்து உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.