போட்டுக்கொடுத்த புது அமைச்சர்.. பதறிய பழைய அமைச்சர்.. திமுகவில் நேரடி மோதல்?
Author: Hariharasudhan21 November 2024, 6:00 pm
அறநிலையத்துறையின் முறையான பராமரிப்பு இல்லாததாலே திருச்செந்தூர் யானையால் இருவர் உயிரிழந்து உள்ளனர் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை: வனத்துறை அமைச்சர் பொன்முடி, இன்று (நவ.21) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தெய்வானை என்ற யானையை வனத்துறையின் அனுமதி இல்லாமல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வளர்த்து வந்தனர். அந்த யானை அசாம் மாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது.
யானைக்கான அனுமதி பெறவில்லை என்றாலும் கூட, யானையைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு உள்ளது என்ற அடிப்படையில், வரும் காலங்களில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும். அறநிலையத்துறை மற்றும் கோயில் நிர்வாகத்தின் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தாலேயே இதுபோன்ற நிகழ்வுகள் அரங்கேறி உள்ளன.
மேலும் பல கோயில்களில் வனத்துறையின் அனுமதி பெற்று யானையை வைத்து உள்ளனர். ஆனால், சில கோயில்களில் மட்டுமே அனுமதி வாங்காமல் யானை வளர்க்கின்றனர். எனவே, அந்த யானைகளுக்கு எல்லாம் அனுமதி வாங்க வேண்டும் என அறநிலையத்துறையிடம் அறிவுறுத்தி உள்ளோம்.
அதேநேரம், திருச்செந்தூர் கோயில் தெய்வானை யானையை கால்நடைத்துறை மருத்துவர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளித்த பிறகு, அந்த யானையை புத்துணர்வு முகாமுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார். இவ்வாறு ஒரு துறை அமைச்சர், மற்றொரு துறை மீது குற்றம் சுமத்தியது திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக, திருச்செந்தூரில் கோயில் யானையாக உள்ள தெய்வானை யானைக்கு பக்தர் ஒருவர் பழம் கொடுக்க முயன்றபோது யானை மிதித்ததில் சிசுபாலன் மற்றும் பாகன் உதயகுமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க: மனைவியுடன் தேனிலவு… பக்கத்து அறையில் ஏ.ஆர்.ரகுமான்…!கூட யார்?
அதேநேரம், முன்னதாக உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, சொத்துக்குவிப்பு வழக்கில் அமலாக்கத் துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர், வெளியில் வந்த அவருக்கு வனத்துறை அமைச்சராக பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் இப்படியான ஒரு கருத்தை பொன்முடி கூறியுள்ளார்.