வாடகைதாரரை கொலை செய்தபோது வெளியான கணவரின் வெறிச்செயல்.. கோவையில் 5 ஆண்டுகள் கழித்து கிடைத்த துப்பு!
Author: Hariharasudhan25 November 2024, 4:48 pm
கோவையில் வாடகைதாரரை கொலை செய்த நபர், ஏற்கனவே தனது மனைவியையும் கொலை செய்த சம்பவம் 5 வருடங்கள் கழித்து வெளி வந்துள்ளது.
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், வாகராயம்பாளயத்தில் கடந்த நவம்பர் 15ஆம் தேதி அன்று வீட்டில் தனியாக இருந்த இளங்கோவன் என்பவரை பைக்கில் முகமூடி அணிந்து வந்த மர்ம கும்பல், மிளகாய் பொடியைத் தூவி, கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச் சென்று உள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், கொலை செய்யப்பட்ட இளங்கோவனின் வீட்டு உரிமையாளர் அமிர்தராஜ் மற்றும் அவருடன் வாழ்ந்து வரும் கலைவாணி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அமிர்தராஜ் வாகரயாம்பாளையம் பகுதியில் தனது மனைவி விஜயலட்சுமி உடன் வசித்து வந்து உள்ளார். அப்போது, அமிர்தராஜுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்து உள்ளது. இது ஒரு கட்டத்தில், மனைவி விஜயலட்சுமிக்கு தெரிய வந்துள்ளது. அப்போது, அமிர்தராஜை விஜயலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த அமிர்தராஜ், தனது மனைவியைக் கொலை செய்யத் திட்டமிட்டு, தன் வீட்டில் குடியிருந்த இளங்கோவனை அணுகியுள்ளார்.
இதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டு இளங்கோவன் மூலம் ஓட்டுநர் ஒருவரை ஏற்பாடு செய்து, லாரியை விஜயலட்சுமி மீது ஏற்றி மனைவியை கொலை செய்துள்ளார் அமிர்தராஜ். ஆனால், போலீசில் லாரி மோதியதில் விஜயலட்சுமி இறந்து விட்டதாக புகார் அளித்தது மட்டுமல்லாமல், மனைவி பெயரில் இருந்த ஆயுள் காப்பீட்டுத் தொகை 15 லட்சம் ரூபாயையும் அமிர்தராஜ் பெற்றுள்ளார். பின்னர், கள்ளத் தொடர்பில் இருந்த கலைவாணியுடன் 5 ஆண்டுகளுக்கும் மேலாக அமிர்தராஜ் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், விஜயலட்சுமியின் கொலைக்கு உடந்தையாக இருந்த இளங்கோவன், வாடகை எதுவும் கொடுக்காமல் பல ஆண்டுகளாக அமிர்தராஜின் வீட்டில் குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இதனால் ஒரு கட்டத்தில் இளங்கோவனை வீட்டை காலி செய்யுமாறு அமிர்தராஜ் கூறியுள்ளார். அப்போது, உனது மனைவியை நீ லாரியை ஏற்றி கொலை செய்ததை போலீசிடம் தெரிவித்து விடுவேன் என இளங்கோவன் அமிர்தராஜ் மிரட்டியுள்ளார். எனவே, கலைவாணியுடன் சேர்ந்து கூலிப்படையை வைத்து இளங்கோவனை கொன்றுள்ளார் அமிர்தராஜ் என்பது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: ‘காட்டு கவர்ச்சி’ காட்டிய கீர்த்தி சுரேஷ்.. பாலிவுட்டுக்கு போனா மட்டும் தாராளமா?
தற்போது இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக, அமிர்தராஜ், கலைவாணி மற்றும் சிறார் உள்ளிட்ட மேலும் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, தலைமறைவாக உள்ள கூலிப்படையைச் சேர்ந்த 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.