3 பேரின் உயிரைக் கொன்ற கூகுள் மேப்.. உ.பியில் சோகம்!
Author: Hariharasudhan25 November 2024, 5:30 pm
உத்தர பிரதேசம் மாநிலம், பரித்பூர் பகுதியில் உள்ள இடிந்த மேம்பாலத்தில் இருந்து கூகுள் மேப் உதவியுடன் பயணித்த கார் கவிழ்ந்து 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பரித்பூர் என்ற இடத்தில் ஆற்றில் இடிந்து போன நிலையில் மேம்பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம், பரேலி என்ற இடத்தில் இருந்து தாதாகட்ச் என்ற இடத்தை நோக்கிச் செல்லும் வழியில் உள்ள ராம்கங்கா ஆற்றில் இருக்கிறது.
இந்த நிலையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக, நேற்று (நவ.24) விவேக்குமார், அவரது சகோதரர் மற்றும் அவரது நண்பர் என மூன்று பேர் காரில் அந்த வழியாக வந்து உள்ளனர். இவ்வாறு வந்த அவர்கள், ஜிபிஎஸ் மூலம் பாதையைப் பார்த்தபடி காரை ஓட்டி வந்து உள்ளனர்.
அப்போது, உடைந்திருந்த பாலத்தில் தடுப்பு எதுவும் அமைக்கப்படவில்லை என்பதால், ஆற்றுப்பாலம் சரியாகத்தான் இருக்கிறது என்ற எண்ணத்தில் காரை வேகமாக ஆற்றுப்பாலத்தின் மீது ஓட்டி வந்துள்ளனர். அப்போது, கார் உடைந்த மேம்பாலத்தில் இருந்து சுமார் 50 அடி ஆழத்தில் கண்ணிமைக்கும் நொடியில் கீழே விழுந்து உள்ளது.
பின்னர், இதனைப் பார்த்த அருகில் உள்ள கிராமத்தினர், தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர். இதன்படி சம்பவ இடத்திற்கு வந்ததீயணைப்புத் துறையினர், ஆற்றுக்குள் மூழ்கிய காரை மீட்டு, அதில் இருந்த 3 பேரும் இறந்துவிட்டனர். மேலும், இந்த விபத்துக்கு மாவட்ட நிர்வாகம் தான் பொறுப்பு என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: வாடகைதாரரை கொலை செய்தபோது வெளியான கணவரின் வெறிச்செயல்.. கோவையில் 5 ஆண்டுகள் கழித்து கிடைத்த துப்பு!
அதேபோல், காரில் பயணம் செய்தவர்கள் ஜிபிஎஸ் பார்த்துக் கொண்டே பயணம் செய்துள்ளனர் என்றும், ஆனால், ஆற்றுப்பாலம் சேதம் அடைந்த தகவல் ஜிபிஎஸ்சில் அப்டேட் செய்யப்படவில்லை என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.