ஆளுநர் மாளிகைக்கு ஓடிய ஸ்டாலின்.. அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகள்!

Author: Hariharasudhan
25 November 2024, 9:52 pm

ராமதாஸின் கேள்விக்கு தரக்குறைவான பதில் அளித்திருப்பது முதலமைச்சரின் இயலாமையைக் காட்டுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை: சென்னையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலினிடம், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஸ்டாலின், ” இது குறித்து சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் உரிய விளக்கம் அளித்துள்ளார். ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை, அதனால் தினமும் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பார். அதற்கு எல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை” என்றார்.

இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “மரியாதைக்குரிய முதலமைச்சர மு.க.ஸ்டாலின் அவர்களே, மக்கள் நலனில் அக்கறை கொண்டு எந்தக் கட்சித் தலைவர் கருத்து சொன்னாலும் அதை மதிக்க வேண்டும் என்பது ஜனநாயகம். மக்களுக்காக கருத்து சொன்னால் அவர்கள் வேலை இல்லாமல் தான் கருத்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்பொழுது சொன்ன கருத்துக்கள் எல்லாம் மக்களுக்காக இல்லாமல் வேலையில்லாமல் இருந்து கொண்டு சொன்ன கருத்துக்கள் தானா.

ஆட்சியில் இருக்கிறோம் என்று ஆணவம் வேண்டாம். அதுவும் பாமக தலைவர் பெரியவர் ராமதாஸ் போன்ற அனுபவமிக்க தலைவர்களின் கருத்தை வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர, பழி சொல்வதாக எடுத்துக்கக் கூடாது என்பதை அரசியல் அனுபவம் மிக்க உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மக்களுக்காக இதை சொல்கிறேனே தவிர எனக்கும் வேலை வேலையில்லாமல் இதை சொல்லவில்லை.

தமிழகத்திற்கு வேலை செய்ய வேண்டும் என்று தான் மற்ற மாநிலங்களில் எனக்கு இருந்த வேலையை விட்டுவிட்டு இங்கே வந்திருக்கிறேன். 2026 யாருக்கு வேலை இருக்கப் போகிறது யாருக்கு வேலை இல்லாமல் போகப் போகிறது என்பதை உணர்த்தும். யாருக்கும் நிரந்தரமாக வேலை இருக்கப் போவதில்லை யாரும் நிரந்தரமாக வேலை இல்லாமல் இருக்கப் போவதில்லை” எனத் தெரிவித்து உள்ளார்.

அதேபோல், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, ” தங்கள் ஆட்சியின் ஊழல்களையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் மக்களிடம் இருந்து மறைக்க, அம்பானி, அதானி என்று திசைதிருப்பும் வேலைகளில் ஈடுபட்டு வந்த திமுக, தற்போது அதானி நிறுவனத்துடன் திமுக அரசுக்கும், குடும்பத்தினருக்கும் தொடர்பு என்ற செய்திகள் வெளிவந்ததும், அதனை மறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இது குறித்து, தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனருமான ராமதாஸ் கேள்வி எழுப்பியதற்கு, தரக்குறைவான முறையில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்திருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது.

Annamalai on MK Stalin

திமுக ஆட்சியில் இல்லாத கடந்த 2011 – 2021 பத்து ஆண்டுகள், அங்கும், இங்கும், ஆளுநர் மாளிகைக்கும் எனத் தான் ஓடி ஓடிச் சென்றதை ஸ்டாலின் மறந்து விட்டார் போலும் ராமதாஸ் மீதான அவரது இன்றைய விமர்சனத்தை, அன்று அவர் மீது வைத்திருந்தால், அதனை அவர் எப்படி எதிர்கொண்டிருப்பார்? அரசியலில் திமுகவின் இரட்டை வேடத்தைக் கேள்வி கேட்க அனைவருக்கும் உரிமை உண்டு.

இதையும் படிங்க: அரசு பெண்கள் பள்ளி அருகில் பாலியல் தொழில்.. கரூரில் வழக்கறிஞர் வீடியோ உடன் புகார்!

குறிப்பாக, தமிழக அரசியல் வரலாற்றில், முக்கியமான பங்கினை வகிக்கும் ராமதாஸ் கேட்டிருக்கும் கேள்வியின் உண்மையை எதிர்கொள்ள இயலாமல், இது போன்ற தரக்குறைவான, முற்றிலும் ஏற்கத் தகாத முறையில் பதிலளித்திருப்பது, முதலமைச்சரின் இயலாமையைத்தான் காட்டுகிறது. அவர் வகிக்கும் தமிழக முதலமைச்சர் பதவிக்கு அது அழகல்ல என்பதை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்” என தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறி உள்ளார்.

மேலும், இது தொடர்பாக ஸ்டாலின் மன்னிப்பு அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார்.

  • Ajithkumar in GBU இன்னும் ஏழே நாள் தான்.. Good Bad Ugly செம அப்டேட்!
  • Views: - 8

    0

    0

    Leave a Reply