நான் செத்தா திருமாவளவன் தான் காரணம்.. வணக்கம்டா மாப்ள பிரபலத்துக்கு நடந்தது என்ன?
Author: Hariharasudhan26 November 2024, 2:19 pm
வணக்கம்டா மாப்ள தேனில இருந்து பிரபலம் அருண் என்பவரை விசிகவினர் தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
தேனி: ‘வணக்கம்டா மாப்ள தேனில இருந்து” எனப் பேசத் தொடங்கும் தேனியைச் சேர்ந்த அருண் என்பவர், டிக்டாக் மூலம் பிரபலமடைந்து, தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களிலும் வீடியோ வெளியிட்டு பிரபலமாகவே இருக்கிறார். இந்த நிலையில், சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில் பேசிய அருண், “பழனி மலைக் கோயிலுக்குச் சென்றால் நான் வேண்டுதலுக்காக வரவில்லை, சிலையை பார்க்க வந்தேன், விநாயகர் சிலை இப்படி இருக்கிறது, முருகன் சிலை அப்படி இருக்கிறது எனப் பேசுகிறீர்கள். சர்ச்சுக்குச் சென்றால் ஏன் சுவற்றைப் பார்த்துப் பேசுகிறீர்கள் என கேட்பீர்களா?
உண்மையிலேயே உங்களுக்கு தைரியம் இருந்தால், ஓட்டு கேட்க போகும் போது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டும் எனக்கு ஓட்டு போடுங்கள், சாமி கும்பிடுபவர்கள் எனக்கு ஓட்டு போட வேண்டாம் என பேசுவீர்களா?” என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளாவனைக் கேட்டு இருந்தார். முன்னதாக, திருமாவளவன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்திருந்தார்.
இதனையடுத்து, விசிக தலைவர் திருமாவளவன் குறித்து அவதூறாகப் பேசியதாக, ‘வணக்கம் டா மாப்ள’ தேனி அருணை, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் மிரட்டியதாக வீடியோ ஒன்றையும் அவரே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இதன்படி, தற்போது சபரிமலைக்கு அருண் மாலை அணிந்திருக்கும் நிலையில், அவர் வேலை பார்க்கும் இடத்திற்குச் சென்ற விசிக துண்டை அணிந்த சிலர், ஆபாசமாகப் பேசியதாகவும், அவரை தாக்க முற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், தன்னை தாக்கியதாக அருண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதையும் படிங்க: அந்த அரசியல் வாரிசுடன் நெருக்கம்.. நாளை தீர்ப்பு.. பரபரப்பை கிளப்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
மேலும், போலீசில் இது குறித்து அவர் புகார் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், இன்று மீண்டும் ஒரு வீடியோவை அவர் வெளியிட்டு உள்ளார். அதில், தன்னை விசிகவினர் தாக்கியதில் நெஞ்சு வலி உள்பட உடலில் பல பகுதிகளில் வலி இருப்பதாகவும், ஒருவேளை தான் இறந்துவிட்டால் அதற்கு விசிக தலைவர் திருமாவளவன் தான் காரணம் எனவும், இதற்கு முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.