திருவாரூரை திருப்பிப் போட்ட கனமழை.. கதறும் விவசாயிகள்.. இபிஎஸ் முக்கிய வலியுறுத்தல்!
Author: Hariharasudhan27 November 2024, 2:31 pm
திருவாரூரில் பெய்து வரும் கனமழையால் 5 ஆயிரத்து 500 ஏக்கர் அளவிலான விவசாயப் பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்து உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
திருவாரூர்: நேற்றைய முன்தினம் முதல், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் அதிகனமழையும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கனமழையும், தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.
அந்த வகையில், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் மாலை வரையில் கனமழை பெய்து. இதனால் நேற்று மற்றும் இன்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து, அங்கு மழை பெய்து கொண்டே இருப்பதால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி உள்ளனர்.
திருவாரூர் உட்பட மாவட்டம் முழுவதும் தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கிய நிலையில், திருவாரூர் நகராட்சி உட்பட அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் நிர்வாகம் மூலம் மோட்டார் கொண்டு மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்து, அதனை அகற்றும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த கனமழையால் திருவாரூரில் 5 ஆயிரத்து 500 ஏக்கர் விவசாயப் பயிர்கள் மூழ்கி சேதம் அடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் கதறி அழும் காட்சிகளும் நெஞ்சை உலுக்குகின்றன. மேலும், சரியாக கணக்கீடு செய்து, மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “தமிழ்நாடு முழுவதும் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: மகளின் தற்கொலைக்கு காரணமானவரை தேடிப் பிடித்து கழுத்தறுத்த தந்தை, அண்ணன்.. கோவையில் பட்டப்பகலில் கொடூரம்!
இந்நிலையில், கனமழையால் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சுமார் 1500 ஏக்கர் பரப்பிலான நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை உரிய அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு தகுந்த நிவாரணத்தை வழங்குமாறு மு.க.ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்து உள்ளார்.
மேலும், திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (நவ.26) காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை திருவாரூர் 88.2 மி.மீ, நன்னிலம் 74 மி.மீ, குடவாசல் 47.2 மி.மீ, வலங்கைமான் 29.4 மி.மீ, மன்னார்குடி 69 மி.மீ, நீடாமங்கலம் 64.8 மி.மீ, பாண்டவையாறுதலைப்பு 46.2 மி.மீ, திருத்துறைப்பூண்டி 60.4 மி.மீ, முத்துப்பேட்டை 51.2 மி.மீ என மொத்தம் 530.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது.