120 கி.மீ வேகம்.. மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் பலி.. OMR-ல் எதிர்பாரா சம்பவம்!
Author: Hariharasudhan27 November 2024, 5:08 pm
செங்கல்பட்டு அடுத்த பண்டிதமேடு பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த 5 பெண்கள் கார் மோதி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அடுத்த பண்டிதமேடு பகுதியானது, திருப்போரூர் – புதுச்சேரியை இணைக்கு முக்கிய சாலையாக விளங்குகிறது. இந்த ஓஎம்ஆர் சாலையில் அதிவேகத்தில் வாகனங்கள் சென்று வருகின்றன. அதேநேரம், இந்த இடைப்பட பகுதியில் பல கிராமங்களும் உள்ளன.
அந்த வகையில், பண்டிதமேடு கிராமத்தைச் சேர்ந்த ஆண்டையா, விஜயா, கெளரி, லோகம்மாள் மற்றும் யசோதா ஆகிய 5 பெண்களும் மாடு மேய்த்துக் கொண்டிருந்து உள்ளனர். 50 வயதைக் கடந்த இந்த 5 பேரும் பண்டிதமேடு பகுதியில் மாடு மேய்த்துக் கொண்டு, வழக்கமாக அமர்ந்திருக்கும் மரத்தின் அடியில் உட்கார்ந்து இருந்து உள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற கார், பலமாக இந்த 5 பெண்கள் மீதும் மோதி இருக்கிறது. இதில், அவர்கள் 5 பேரும் கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், இது குறித்து அறிந்த கிராமத்தினர், காரில் இருந்த நபர்களைப் பிடித்து உள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் இருவருக்கு தர்ம அடி கொடுத்து உள்ளனர். இதனிடையே, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாமல்லபுரம் போலீசார், தர்ம அடியில் சிக்கிக் கிடந்த இருவரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: மனைவியின் அந்தரங்க படங்களை அனுப்பிய கணவர்.. புதுச்சேரியில் அதிர்ச்சி!
மேலும், திருப்போரூர் சாலையில் பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், காரில் 4 பேர் இருந்ததும், அவர்கள் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதும், அதில் இருவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்ததும் தெரிய வந்து உள்ளது. அது மட்டுமல்லாமல், 120 கிலோமீட்டர் வேகத்தில் வந்து, அதிவேகமாக மோதியதும் விசாரணையில் வெளி வந்து உள்ளது.