உங்க குளிர்கால டயட்ல இந்த ஒரு பொருள் இருந்தாலே எல்லா பிரச்சனையும் சால்வ் ஆகிவிடும்!!!
Author: Hemalatha Ramkumar28 November 2024, 5:45 pm
குளிர்காலம் வந்துவிட்டது. எல்லா வருடமும் போல இந்த வருடமும் அழையா விருந்தாளியாக மாசுபாடும் குளிர்காலத்துடன் சேர்ந்து வந்து விட்டது. குளிர்ந்த காற்றில் நச்சுக்கள் கலந்த இந்த காம்பினேஷன் நம்முடைய நவீன வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களோடு சேர்ந்து பல்வேறு பிரச்சனைகளை நமக்கு ஏற்படுத்துகிறது. ஆரோக்கியத்தை ஒருபுறம் இது பாதித்து வரும் அதே சமயத்தில் குளிர்காலம் மற்றும் மாசுபாடு ஆகிய இரண்டும் அளவுக்கு அதிகமான தலைமுடி உதிர்வு, இளநரை, முகப்பரு அல்லது சருமத்தில் துளைகள் போன்ற பிரச்சனைகளை உண்டாக்குகிறது. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு பலர் சப்ளிமெண்ட்கள் மற்றும் மருந்துகளை நாடுகின்றனர். ஆனால் உங்களுடைய குளிர்கால உணவை மேம்படுத்துவதற்கு பழங்கால இந்திய சமையலறை பொருள் ஒன்று உதவும் என்று சொன்னால் நம்புவீர்களா ?
ஆமாம், நாட்டு நெல்லிக்காய் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்த நெல்லிக்காயை குளிர்கால உணவில் சேர்த்து வர நிச்சயமாக நமக்கு பல்வேறு பலன்கள் கிடைக்கும். வைட்டமின் C நிறைந்த நெல்லிக்காய் நமது சருமத்திற்கும், தலைமுடிக்கும் தேவையான போஷாக்கை வழங்கி அதனை ஆரோக்கியமாக வைக்கிறது. வைட்டமின் C என்ற வலிமையான ஆன்டி-ஆக்சிடன்ட் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதன் மூலமாக சருமம் உறுதியாகி, சுருக்கங்கள் குறைந்து, சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்துகிறது.
மேலும் தோலில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து சருமத்தை புத்துணர்ச்சியாக மாற்றுகிறது. நெல்லிக்காயில் உள்ள வீக்க எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைத்து முகப்பருக்களை ஆற்றி சிவத்தல் அல்லது எரிச்சலை போக்குகிறது. அது மட்டுமல்லாமல் வைட்டமின் C கரும்புள்ளிகளை குறைக்கும் நன்மைகளை வழங்குகிறது.
தினமும் ஒரு கிளாஸ் நெல்லிக்காய் சாறு குடிப்பது தலைமுடி உதிர்வை குறைத்து, மயிர் கால்களின் வலிமையை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. மேலும் நெல்லிக்காய் சாறு தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் உதவுகிறது. வழக்கமான முறையில் இதனை நீங்கள் குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, உங்களுடைய மயிர் கால்கள் அதிக வலிமையாகி தலைமுடி அடர்த்தியாக மாறும். அது மட்டுமல்லாமல் பொடுகு பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
சருமத்தை பற்றி பேசும் பொழுது நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் C சருமத்தை இயற்கையான முறையில் பிரகாசமாக மாற்றுகிறது. மேலும் இது கரும்புள்ளிகள், கறைகள் மற்றும் பிக்மென்டேஷன் பிரச்சனையை போக்குவதற்கு உதவுகிறது. நெல்லிக்காயில் காணப்படும் வைட்டமின் C மற்றும் வைட்டமின் E போன்ற வைட்டமின்கள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடுகிறது. தலைமுடியில் மெலனின் உற்பத்தியை அதிகரித்து இதனால் நரைமுடி பிரச்சனைக்கு தீர்வு தருகிறது.
நெல்லிக்காயை ஊறுகாயாக சாப்பிடுவது சிறந்ததா?
பல வருடங்களாக இந்தியாவில் ஊறுகாய் என்பது பாரம்பரியமாக செய்யப்படும் ஒரு உணவாக அமைகிறது. கோடை காலத்தில் கிடைக்கும் மாங்காய், எலுமிச்சை மற்றும் பிற சிட்ரஸ் பழங்களை ஊறுகாயாக செய்து வைத்துவிட்டு அதனை வருடம் முழுவதும் சாப்பிடுவது வழக்கம். வினிகர், கடுகு மற்றும் வெந்தய பொடி, உப்பு, எண்ணெய் போன்றவை சேர்த்து ஊறுகாய் செய்யப்படுகிறது. இந்த புளிக்க வைக்கும் செயல்முறையானது நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் மதிப்பை இன்னும் அதிகரிப்பதாக ஒரு சில நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிக்கலாமே: சுடச்சுட டீ, காபி குடிப்போருக்கு கேன்சர் எச்சரிக்கை விடுத்த புதிய ஆய்வு!!!
இது நெல்லிக்காயை பச்சையாக சாப்பிடுவதை விட சிறந்தது என்று சொல்லப்படுகிறது. எனினும் வைட்டமின் C பற்றி பேசும்பொழுது நெல்லிக்காய் ஊறுகாயை விட பச்சையான நெல்லிக்காயில் அதிக அளவு வைட்டமின் C இருக்கிறது. எனினும் நெல்லிக்காய் ஊறுகாயில் ப்ரோபயாடிக் அதிகமாக காணப்படுகிறது. மேலும் நெல்லிக்காய் ஊறுகாயில் அதிக அளவு உப்பு இருப்பதன் காரணமாக இது சற்று குறைவான ஆரோக்கியம் கொண்டதாகவும் கருதப்படுகிறது.
மேலும் ஊறுகாய் செய்யும் பொழுது அதிகப்படியான எண்ணெய் பயன்படுத்தப்படுவதும் ஒரு ட்ராபாக்காக உள்ளது. ஆனால் இந்த புளிக்க வைக்கும் செயல்முறை நம்முடைய குடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை அளிக்கிறது. குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையை பராமரித்து வயிற்று உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் செரிமான நொதிகளின் உற்பத்தியை அதிகரித்து ஊட்டச்சத்துக்களை உடைத்து அவை எளிதில் உறிஞ்சப்படுவதை உறுதி செய்கிறது. ஆனால் நீங்கள் எவ்வளவு ஊறுகாய் சாப்பிடுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். ஊறுகாயில் உள்ள உப்பு மற்றும் எண்ணெயின் அளவை குறைத்துக் கொண்டால் இவை ஒரு சிறந்த உணவாக மாறிவிடும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.