கடலில் தவித்த கடலூர் மீனவர்கள்.. கதறிய உறவினர்கள்.. ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டது எப்படி?
Author: Hariharasudhan28 November 2024, 7:01 pm
கடலூரில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் சூறாவளிக் காற்றால் கடலின் நடுவே தவித்த நிலையில் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர்.
கடலூர்: நேற்று கடலூர் மாவட்டத்தின் கடல் பகுதியில் ஏற்கனவே மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பிக் கொண்டிருந்தனர். இவ்வாறு வந்து கொண்டிருந்த மீனவர்களின் மீன்பிடி படகுகள் இரண்டு ராட்சத அலையில் சிக்கி கவிழ்ந்து உள்ளது. இதில், தைகால் தோணித்துறை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேர், 2 படகுகளில் கரை திரும்பும்போது கடல் சீற்றத்தில் சிக்கியுள்ளனர். இதானல் இரண்டு படகுகளும் கவிழ்ந்து உள்ளது.
இதனால் படகில் இருந்த 6 மீனவர்களும் கடலில் தத்தளித்துள்ளனர். அதேநேரம், இவர்கள் அனைவரும் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான கப்பல் இறங்கு தளத்தில் சிக்கிக்கொண்டனர். பின்னர், கடலில் சிக்கிக்கொண்ட தகவலை உறவினர்களுக்கு பகிர்ந்தவர்கள், உடனடியாக தங்களை மீட்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதனையடுத்து, நேற்று இரவு முதல் மீட்புப் பணிகள் தொடங்கி நடைபெற்றன. அப்போது, அலையின் சீற்றம் அதிகமாக இருப்பதால் மீட்பு பணிக்கு படகுகளை பயன்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது. எனவே, ஹெலிகாப்டர் உதவி நாடப்பட்டது. இதன்படி, இன்று பிற்பகல் கடலோர காவல் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர், மீனவர்கள் சிக்கியுள்ள பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் முதல்கட்டமாக 2 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து பெண்களுக்கு வலை விரித்த காவலர்.. மனைவியும் புகார்.. சென்னையில் நடந்தது என்ன?
மீதமுள்ள 4 மீனவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று அவர்களும் தற்போது மீட்கப்பட்டு உள்ளனர். இதனிடையே, அவர்கள் கடலின் நடுவே அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் பாதுகாப்பாக இருக்கும் காட்சிகள் வெளியாகியது. மேலும், வங்கக் கடலில் ஏற்படும் புயல் காரணமாக கரையோர மாவட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.