தினமும் அதிகாலை 3 மணிக்கு விழிப்பு வர காரணம் என்னவா இருக்கும்…???
Author: Hemalatha Ramkumar29 November 2024, 5:47 pm
இரவு நேரத்தில் விழித்தல் என்பது உலக அளவில் 50 முதல் 70 சதவீத நபர்களை பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சினையாக இருக்கிறது. சொல்லப்போனால் இரவு முழுவதும் பெரும்பாலான மக்கள் அடிக்கடி தங்களுடைய துக்கத்திலிருந்து விழித்து கொள்கின்றனர். எனினும் தூக்கத்திலிருந்து விழித்த பிறகு உடனடியாக தூங்கி விடுவதால் இதனை பெரும்பாலானவர்கள் கவனிப்பதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு விழிப்பு வந்தவுடன் மீண்டும் தூக்கம் வராத காரணத்தால் அவதிப்படுவார்கள். மீண்டும் தூங்குவது அவர்களுக்கு சவாலானதாக இருக்கும். இதன் காரணமாக அவர்களுடைய ஒட்டுமொத்த தூக்கத்தின் தரம் பாதிக்கப்பட்டு நாள் முழுவதும் சோர்வாக உணர்வார்கள். மேலும் இது அவர்களுடைய வேலையையும் பாதிக்கும் மற்றும் உடல் மற்றும் மன நலனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை விழிப்பு வருவதற்கான காரணம்
மன அழுத்தம்
நடு இரவில் விழித்துக் கொள்வதற்கு பின்னணியில் உள்ள பொதுவான காரணம் மன அழுத்தம். நாம் மன அழுத்தமாக இருக்கும் பொழுது நம்முடைய உடலின் உணர்ச்சி செலுத்தும் நரம்பு மண்டலம் ஆக்டிவேட் செய்யப்படும். இதன் காரணமாக நம்முடைய உடலில் கார்ட்டிசால் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் வெளியிடப்படுகிறது. இந்த ஹார்மோன்கள் தூக்க அட்டவணையை சீர்குலைத்து, நடு இரவில் நீங்கள் விழித்துக் கொள்வதற்கு காரணமாக அமைகிறது.
வயது
நமக்கு வயதாக ஆக நம்முடைய தூக்க அட்டவணை இயற்கையாகவே மாற்றத்திற்கு உள்ளாகிறது. இதனால் நடு இரவில் அதிலும் குறிப்பாக அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரை அடிக்கடி விழிப்பு ஏற்படலாம். வயதானவர்கள் பெரும்பாலும் குறைவான மெலடோனின் உற்பத்தி மற்றும் குறைவான தூக்கம், சிறிய சத்தம் கேட்டால் கூட உடனடியாக தூக்கத்தில் இருந்து விழித்து கொள்வது மற்றும் அசௌகரியத்தை அனுபவிக்கிறார்கள். இந்த மாற்றங்கள் காரணமாக இரவு முழுவதும் அடிக்கடி தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்வதற்கான சூழ்நிலை உருவாகிறது.
இதையும் படிக்கலாமே: காற்று மாசுபாட்டை சமாளிக்க சரியான ஆயுதம்!!!
தூக்கமின்மை
தூக்கமின்மை என்பது இரவில் விழித்துக் கொள்வதற்கு முக்கியமான ஒரு காரணமாக அமையும். பொதுவாக இந்தக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு நபர் தூங்குவதில் சிக்கலை அனுபவிப்பார். மேலும் தொடர்ந்து தூங்குவது சவாலானதாக இருக்கும். இதனால் இரவில் நிம்மதியான மற்றும் தொடர்ச்சியான தூக்கத்தை பெறுவதில் பிரச்சனை ஏற்படும். இதன் காரணமாக பகல் நேரத்தில் சோர்வு, மனநிலை மாற்றங்கள் போன்றவை ஏற்படலாம்.
மோசமான வாழ்க்கை முறை
தேர்வுகள் மோசமான வாழ்க்கை முறை தேர்வுகள் காரணமாகவும் ஒருவருடைய தூக்கத்தின் தரம் பாதிக்கப்படலாம். அதிக அளவு உணவு சாப்பிடுவது, புகைபிடித்தல் அல்லது மது அருந்துதல் மற்றும் தூங்க செல்வதற்கு முன்பு காஃபைன் குடிப்பது போன்றவை உடலை தூண்டி தூங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும். இதனால் இரவில் அடிக்கடி விழித்துக் கொள்ள நேரலாம்.
மெனோபாஸ் அறிகுறிகள்
ஹாட் ஃபிளாஷ் மற்றும் இரவு நேர வியர்வை போன்ற மெனோபாஸ் அறிகுறிகள் பெண்களை நடு இரவில் விழித்துக் கொள்வதற்கு காரணமாக அமைகிறது. இந்த அறிகுறிகள் உடலின் வெப்பநிலையை அதிகரித்து, அசௌகரியம், பதட்டம் மற்றும் தூக்கமின்மையை ஏற்படுத்துகின்றன. இதனால் அவர்கள் மீண்டும் தூங்குவதில் சிக்கலை அனுபவிக்கிறார்கள்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.