பெண்களுக்கான பாடி ஆயில்கள்… எந்தெந்த சருமத்திற்கு எந்தெந்த எண்ணெய் ஏற்றதாக இருக்கும்…???
Author: Hemalatha Ramkumar30 November 2024, 6:32 pm
உங்களுடைய சருமத்தை மென்மையாக்குவதற்கும், ஈரப்பதத்தோடு வைப்பதற்கும் விலை உயர்ந்த ஸ்கின்கேர் ப்ராடக்டுகளை வாங்கி சோர்ந்து போய் விட்டீர்களா? அப்படி என்றால் நீங்கள் பாடி ஆயில் பயன்படுத்த வேண்டிய சரியான நேரம் இது. லோஷன்களைப் போல அல்லாமல் பாடி ஆயில் சருமத்திற்குள் ஆழமாக ஊடுருவி, அதற்கு தேவையான ஈரப்பதம் மற்றும் அத்தியாவசிய போஷாக்கை வழங்குகிறது. உங்களுடைய சருமத்திற்கு தேவையான போஷாக்கை வழங்கவும், பாதுகாப்பு கொடுக்கவும், ஆரோக்கியமாக வைப்பதற்கான எளிமையான அதே நேரத்தில் திறமையான ஒரு தீர்வு பாடி ஆயில். மார்க்கெட்டில் ஏராளமான பாடி ஆயில் விற்பனை செய்யப்பட்டாலும் உங்களுடைய சருமத்திற்கு ஏற்ற சரியான பாடி ஆயிலை தேர்வு செய்வது மிகவும் அவசியம். அதற்கான சில குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்களுக்கான பல்வேறு வகையிலான பாடி ஆயில்கள்
ஆர்கான் எண்ணெய்
வைட்டமின் E மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆர்கான் எண்ணெய் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி, அதன் நெகிழ்வுத் தன்மையை அதிகரிக்கிறது. மேலும் சூரிய கதிர்களால் ஏற்படும் சேதத்தில் இருந்தும் ஆர்கான் ஆயில் பாதுகாப்பு வழங்குகிறது.
தேங்காய் எண்ணெய்
ஆன்டி-ஆக்சிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காணப்படும் தேங்காய் எண்ணெய் வறண்ட சருமத்தை ஆற்றி, ஆரோக்கியமான, பொலிவான சருமத்தை தருகிறது. தேங்காய் எண்ணெய் சருமத்திற்கு இயற்கையான பாதுகாப்பு அமைப்பாக அமைகிறது.
ஜோஜோபா எண்ணெய்
இந்த குறைந்த எடை கொண்ட எண்ணெய் சமநிலை உற்பத்தியை பேணுகிறது. இதில் ஆன்டி-ஆக்சிடன்ட் பருக்களுக்கு எதிரான பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள், நுண்ணுயிரி எதிர்ப்பு மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் காணப்படுவதால் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஜோஜோபா எண்ணெய் உதவுகிறது.
இனிப்பு பாதாம் எண்ணெய்
பெண்களுக்கான பாடி ஆயில்களில் இனிப்பு பாதாம் எண்ணெயில் சருமத்தை ஆற்றவும், மென்மையாக்கவும் தேவையான வைட்டமின் A மற்றும் வைட்டமின் E நிறைந்துள்ளது.
லாவண்டர் எண்ணெய்
அமைதியூட்டும் விளைவுகள் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் அடங்கிய லாவண்டர் எண்ணெய் சருமத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தத்தை போக்கி, எரிச்சலை ஆற்றி அதற்கு ஓய்வு தருகிறது.
வெவ்வேறு சரும வகைக்கு ஏற்ற சரியான பாடி ஆயிலை தேர்வு செய்வது எப்படி?
வறண்ட சருமத்திற்கான சிறந்த பாடி ஆயில்
வறண்ட சருமத்திற்கு அவகாடோ, தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற போஷாக்கு நிறைந்த பாடி ஆயில்களை பயன்படுத்த வேண்டும். செரமைடுகள் அல்லது ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆழமான ஈரப்பதம் வழங்கும் பாடி ஆயிலை தேர்வு செய்வது அவசியம்.
எண்ணெய் சருமத்திற்கான சிறந்த பாடி ஆயில்
எண்ணெய் சருமத்திற்கு ஜோஜோபா எண்ணெய், திராட்சை விதை எண்ணெய் அல்லது ஆர்கான் எண்ணெய் சிறந்ததாக இருக்கும். இந்த எண்ணெய் சருமத்தில் உள்ள துளைகளை அடைக்காமல் முகப்பருவை ஏற்படுத்தும் வீக்கத்தை குறைத்து, அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்தும்.
சென்சிட்டிவ் சருமத்திற்கான சிறந்த பாடி ஆயில்
சென்சிட்டிவ் சருமம் கொண்டவர்கள் சாமந்திப்பூ எண்ணெய் அல்லது காலெண்டுலா எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. இந்த எண்ணெய் சருமத்தில் உள்ள சிவத்தல் மற்றும் எரிச்சலை ஆற்றி வீக்கத்தை குறைக்கும்.
சாதாரண சருமத்திற்கான பாடி ஆயில்
ஒருவேளை உங்களுடைய சருமம் சாதாரண சருமமாக இருந்தால் பாதாம் எண்ணெய் மற்றும் ஆப்ரிக்காட் எண்ணெய் போன்றவை சிறப்பாக வேலை செய்யும்.
வயதான சருமத்திற்கான பாடி ஆயில்
வயதான அல்லது முதிர்ந்த சருமத்திற்கு அதிக ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த மாதுளம் பழம் விதை எண்ணெய் அல்லது ரோஸ்ஷிப் எண்ணெய் சிறந்ததாக இருக்கும். இது வயதான அறிகுறிகளை எதிர்த்து போராடுவதற்கு உதவும் ஆன்டி-ஆக்சிடன்ட்களை கொண்டுள்ளது.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.