திருவண்ணாமலை மண்சரிவு.. 7 பேரின் நிலை என்ன? தொடர் மீட்புப்பணி!
Author: Hariharasudhan2 December 2024, 9:55 am
திருவண்ணாமலை மலை அடிவாரப் பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 7 பேரை மீட்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை: வங்கக் கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் கடந்த இரு நாட்களாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனையடுத்து, புயல் கரையைக் கடந்த நேற்று, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது.
இதனால், பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும், சில இடங்களில் சூழ்ந்த மழைநீரில் தத்தளித்த பொதுமக்களை, தீயணைப்புத் துறையினர், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு வந்தனர். அப்போது, நாய், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் அவர்கள் மீட்டனர்.
அந்த வகையில், திருவண்ணாமலை மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் குடியிருப்புகள் உள்ளன. இந்த நிலையில், இந்தப் பகுதியில் பெய்த தொடர் கனமழையால், மலையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பாறைகள் உருண்டு விழுந்ததில், 2 வீடுகள் முற்றிலும் சிதிலமடைந்தன.
இதன் காரணமாக, இந்த வீடுகளில் வசித்து வந்த 7 பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என்ற அச்சம் ஏற்பட்டு உள்ளது. இந்தச் சம்பவம் நேற்று மாலையே நடைபெற்றதால், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். ஆனால், அவர்களால் மீட்புப் பணியைத் தொடர முடியவில்லை.
இதனையடுத்து, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அப்பகுதிக்குச் சென்றனர். இருப்பினும், இரவு நேரம் என்பதால், மீட்புப் பணியை தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டது. இதனால் இரவு முழுவதும் மீட்புப் பணிகள் துவங்கப்படவில்லை. இந்த நிலையில், இன்று அதிகாலையே பேரிடர் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: “இட்லிக்கடை”படத்தின் தனுஷ் கெட்டப் கவனிச்சீங்களா…வைரலாகும் புகைப்படம்..!
மேலும், மோப்ப நாய்கள் உதவி உடன் வீடு இடிபாடுகளில் சிக்கிய சிறுவர்கள் உட்பட 7 பேரை தேடும் பணிகள் தொடங்கியுள்ளன. அதேநேரம், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வீடுகளை மழை வெள்ள நீர் சூழ்ந்ததால் , மீட்புப் படையினர் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.