எச்.ராஜா சிறை தண்டனை நிறுத்திவைப்பு.. என்ன காரணம்?

Author: Hariharasudhan
2 December 2024, 2:15 pm

அவதூறு வழக்குகளில் எச்.ராஜாவுக்கு வழங்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனையை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைத்து உள்ளது.

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இருந்து வருகிறார் எச்.ராஜா (H.Raja). இந்த நிலையில், இவர் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச்சில், பெரியார் சிலையை உடைப்பேன் என எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

மேலும், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி குறித்தும் எச்.ராஜா அவதூறு கருத்து தெரிவித்து இருந்தார். இது தொடர்பான பல்வேறு காவல் நிலையங்களில் திமுக நிர்வாகிகள், தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டது.

அதேநேரம், கனிமொழி மீதான விமர்சனம் தொடர்பாக ஈரோடு நகர போலீசாரும், பெரியார் சிலையை உடைப்பேன் என்ற கருத்து தொடர்பாக ஈரோடு மாவட்ட கருங்கல்பாளையம் போலீசாரும், எச்.ராஜாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், பெண்களுக்கு எதிராக ஆபாசமாகப் பேசுதல், பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் எச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

H Raja in defamation case

இதனையடுத்து இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்எல்ஏ, எம்பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அதேநேரம், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை 3 மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு இருந்தது. இந்த நிலையில், இந்த மனு மீது சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் அமர்வு இன்று தீர்ப்பு அளித்தது. இதன்படி, 41 பக்கத் தீர்ப்பில் எச்.ராஜாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போலீஸ் தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: சாதிமறுப்புத் திருமணம் செய்த அக்காவை நடுரோட்டில் வெட்டிக் கொன்ற தம்பி.. ஹைதராபாத்தில் கொடூரம்!

எனவே, எச்.ராஜா குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு, அவதூறு கருத்துடைய இரு பதிவுகளும் எச்.ராஜாவின் சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து அனுப்பப்பட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது. இதனையடுத்து, எச்.ராஜாவுக்கு இரு வழக்குகளிலும் தலா 6 மாதம் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.

தொடர்ந்து, இந்த வழக்குகளில் மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், எனவே இதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் எச்.ராஜா தரப்பில் கோரப்பட்டது. இதனையடுத்து, இந்த தண்டனையை நிறுத்தி வைத்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், எச்.ராஜா மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக சிறப்பு நீதிமன்றத்தால் அவருக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!