துண்டான உடல் பாகங்கள்.. பதற வைத்த ஃபெஞ்சலின் கோர முகம்.. இருவரை மீட்பது எப்போது?
Author: Hariharasudhan3 December 2024, 11:10 am
திருவண்ணாமலை நிலச்சரிவில் புதைந்து 7 பேர் உயிரிழந்ததற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
திருவண்ணாமலை: ஃபெஞ்சல் புயல் காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இந்த நிலையில், திருவண்ணாமலையின் தீபமலையில் நேற்றைய முன்தினம் (டிச.1) மாலை 4.40 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் மலை அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் 9வது தெருவில் உள்ள குடியிருப்புகள் இந்த மண் சரிவில் சிக்கின. அப்போது சுமார் 40 டன் எடை கொண்ட பாறை ஒன்று உருண்டு வந்து அபாயகரமான வகையில் நின்றது. இந்த மண் சரிவில் சிக்கிய 3 வீடுகளில் ராஜ்குமார் என்பவரின் வீடு முழுவதுமாக மண்ணுக்குள் புதைந்தது.
மேலும் இரண்டு வீடுகளில் குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறியதால் மண்ணில் புதையாமல் தப்பி உள்ளனர். அதேநேரம், ராஜ்குமார் வீட்டுக்குள் ராஜ்குமா, அவரது மனைவி மீனா, மகன் கவுதம், மகள் இனியா, ராஜ்குமாரின் உறவு சிறுமிகளான மகா, வினோதினி மற்றும் ரம்யா என 7 பேர் இருந்தனர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது, மண்ணுக்குள் புதைந்த வீட்டுக்கு மேல் பகுதியில் மிகப்பெரிய ராட்சத பாறை சரியும் நிலையில் அபாயகரமான வகையில் இருந்ததால், மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டது.
பின்னர் நேற்று (டிச.2) காலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் தீயணைப்புப் படையினர் உள்ளிட்டோர் இணைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர். இத ஒருகட்டத்தில் வீட்டின் அருகே கிடந்த மண் குவியல்களை அப்புறப்படுத்திய மீட்புப் படையினர், முதலில் சிறுவன் கவுதமனின் உடலை மீட்டனர்.
இதனையடுத்து ராஜ்குமார், அவரது மனைவி மீனா, மகள் இனியா, பக்கத்து வீட்டு சிறுமி வினோதினி ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால், உடல்களை பாகம் பாகமாக மீட்டது அங்கிருந்தவர்களின் கண்களை கலங்கச் செய்தது. இதனிடையே, மிகப்பெரிய பாறை ஒன்று இருந்ததால், மீதமுள்ள இருவரின் உடல்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் நிறுத்தப்பட்டு, இன்று (டிச.3) மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளன.
இதையும் படிங்க: கர்ப்பிணி பேராசிரியை மரண வழக்கில் திருப்பம்.. சாட்சியாக வந்த 4 வயது மகன்!
இந்த நிலையில், மீதம் உள்ள இருவரின் உடல்களை மீட்பதற்கு தாமதாமவதை அடுத்து, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது. இதனிடையே, இந்த திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார்.