’கார்ல இருந்து இறங்க மாட்டீங்களா’.. திமுக ஞாபகம் வைக்க இதுபோதும்.. அண்ணாமலை கடும் தாக்கு!
Author: Hariharasudhan3 December 2024, 3:46 pm
விழுப்புரத்தில், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்யச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது பொதுமக்கள் சேற்றை வாரி வீசியச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விழுப்புரம்: வங்கக் கடலின் தென் பகுதியில் உருவான ஃபெஞ்சல் புயலால் சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகள் கடும் பாதிப்புகளைச் சந்தித்து உள்ளது. எனவே, ஆளும் தரப்பினர், அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து, ஆறுதல் கூறியும், நிவாரணங்கள் வழங்கியும் வருகின்றனர்.
அந்த வகையில், ஃபெஞ்சல் புயல் மழையால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு பகுதிக்கு வனத்துறை அமைச்சர் பொன்முடி, விக்கிரவாண்டி எம்எல்ஏ அன்னியூர் சிவா, விழுப்புரம் திமுக மாவட்ட செயலாளர் கௌதம சிகாமணி மற்றும் திமுக நிர்வாகிகள் சென்றனர்.
அப்போது, அமைச்சர் பொன்முடி தன்னுடைய காரில் இருந்து இறங்காமல், பாதிப்பு குறித்து விசாரித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், ‘காரில் இருந்து இறங்க மாட்டீங்களா, நேற்று வராமல் இப்போது எதற்காக வருகிறீர்கள் ?’ என்று கேட்டு வாக்குவாதம் செய்து உள்ளனர். அது மட்டுமல்லாமல், அவர்கள் மீது மழைச் சேற்றை வாரி இறைத்து, சாலை மறியலிலும் ஈடுபட்டு உள்ளனர்.
இதனையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனர். பின்னர், காரை விட்டு இறங்கிய அமைச்சர் பொன்முடி, எம்எல்ஏ அன்னியூர் சிவா மற்ரும் கௌதம சிகாமணி ஆகியோர், பாதிக்கப்பட்ட பகுதிகளை சிறிது நேரம் ஆய்வு செய்துவிட்டு, அங்கிருந்து உடனடியாக புறப்பட்டுச் சென்றனர்.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “இதுதான் தமிழகத்தின் தற்போதைய நிலை. முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் சென்னையின் தெருக்களில் புகைப்படம் எடுப்பதில் மும்முரமாக இருந்தனர். அதேநேரம், சென்னை மாநகரில் மிகக் குறைந்த மழையே பெய்தது.
சென்னையைத் தாண்டி நடக்கும் நிகழ்வுகளைக் கண்காணிக்கத் தேவையில்லை என அவர்கள் எண்ணிவிட்டனர். திமுகவின் ஊடகப் பிரிவாக டிஐபிஆர் (TN DIPR) நடந்துகொள்வதுடன், வெள்ளத்தின் உண்மைகளிலிருந்து மக்களைத் திசைதிருப்ப கோபாலபுரம் வாரிசுகளை விளம்பரப்படுத்துவதில் அது மும்முரமாக உள்ளது.
இதையும் படிங்க: ’சங்கினா நண்பன்.. திராவிடன்னா திருடன்..” மீண்டும் சீமான் பரபரப்பு பேச்சு!
இன்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட ஊழல் திமுக அமைச்சர் பொன்முடியால், பொதுமக்களின் விரக்தி உச்சநிலையை எட்டியது. திமுகவுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு நினைவூட்டல்” எனத் தெரிவித்து உள்ளார்.