அதிவேகமாகச் சென்ற கார் ஏரியில் கவிழ்ந்து விபத்து – 5 பேர் பலி
Author: Hariharasudhan7 December 2024, 12:05 pm
தெலுங்கானா மாநிலத்தில் அதிவேகமாகச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத் ஆர்டிசி காலனியைச் சேர்ந்த 6 இளைஞர்கள், காரில் நேற்று (டிச.06) இரவு புறப்பட்டு, கொத்தகுடேம் வழியாக போச்சம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்து உள்ளனர். அப்போது, இவர்களது கார் யாதாத்திரி புவனகிரி மாவட்டம், பூதான் போச்சம்பள்ளி மண்டலம் ஜலால்பூர் அருகே அதிவேகமாக சென்றுள்ளது.
இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்கு கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த ஏரியில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் மணிகண்டாவிற்கு மட்டும் நீச்சல் தெரியும் என்பதால், கார் கதவைத் திறந்து நீச்சல் அடித்துக் கொண்டு வெளியே வந்துள்ளார்.
மேலும், உதவிக்காக அவ்வழியாகச் சென்ற வாகன ஓட்டிகளை நிறுத்திப் பார்த்துள்ளார். ஆனால், யாரும் நிற்காத நிலையில், பின்னர் அவ்வழியாகச் சென்ற பால் வியாபாரி வாகனத்தை நிறுத்தி, நடந்த விவரத்தை கூறியுள்ளார். பின்னர், இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
இதையும் படிங்க: தியேட்டரில் நடந்த கோர சம்பவம்… ₹25 லட்சம் கொடுத்த அல்லு அர்ஜூன்!!
இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிரேன் மூலம் காரை மீட்பதற்கான முயற்சியில் இறங்கினர். இறுதியில், காரில் இருந்த ஹர்ஷா, தினேஷ், வம்சி, பாலு மற்றும் வினய் ஆகியோர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர். தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அப்பகுதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.