சிறு அளவு கூட நற்பணிகள் இல்ல.. குற்றச்சாட்டுலாம் சொல்லக்கூடாது.. கூட்டணி கட்சி எம்எல்ஏவைப் பார்த்து அப்பாவு சொன்ன அந்த வார்த்தை!

Author: Hariharasudhan
9 December 2024, 2:13 pm

தமிழக சட்டப்பேரவையில், கூட்டணி கட்சி எம்எல்ஏவான வேல்முருகன் எழுப்பிய கேள்விக்கு அப்பாவு பதில் சொன்ன விதம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் மாதத்திற்குப் பிறகு இன்று கூடியது. இந்த அவை இன்று மற்றும் நாளை என 2 நாட்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று கூடிய அவையில், முதலில் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதனையடுத்து அவையில் கேள்வி நேரம் தொடங்கியது.

இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன், “கடந்த 4 ஆண்டுகளில் என்னுடைய பண்ருட்டி தொகுதியில் ஏராளமான மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டு இருக்கின்றன. அகன்டை, பெரிய பரண்டை, சின்ன பரண்டை, குமாரமங்கலம், பட்டாம்பாக்கம் மற்றும் நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான கிராமங்களில் மக்கள் வெள்ளம் காரணமாக பெரும் துயரத்தைச் சந்தித்து வருகின்றனர்.

Appavu in TN Assembly

இதுதொடர்பாக, அமைச்சரை நான்காண்டு காலத்தில் முதல் முறையாகச் சந்தித்து ஒரு கடிதம் கொடுத்தேன். ஒரு தடுப்பணையும், வெள்ளம் ஊருக்குள் வராமல் தடுப்பதற்கான பாதுகாப்பு அரண்களையும், சுவர்களையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

தாங்களும் அதற்கான முயற்சிகளை எடுத்து துறையின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தி இருந்தீர்கள். ஆனால், என் தொகுதிக்கு இதுவரையில் தங்கள் துறையிலிருந்து ஒரு சிறு அளவு கூட எந்த நற்பணிகளும் நடைபெறவில்லை” எனக் கூறினார்.

இதையும் படிங்க: ‘கட்சிக்குள்ளேயே எதிர்மறை தாக்கம்’.. ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட்.. திருமாவின் காரணம்!

அப்போது குறுக்கிட்ட அவைத்தலைவர் அப்பாவு, “கேள்வி நேரம் என்பது கேள்விக்கானது மட்டுமே, குற்றச்சாட்டுகளுக்கானது அல்ல. எனவே, இந்த குற்றச்சாட்டை அவை குறிப்பிலிருந்து நீக்கி விடலாம்” என்று கூறினார். உடனடியாக, “செய்யவில்லை என்றால் செய்யவில்லை என்று தானேச் சொல்ல முடியும்?” என வேல்முருகன் கூறினார்.

Duraimurugan in TN Assembly

இதனையடுத்து சபாநாயகர், “எதை செய்யவில்லை என்று குறிப்பிட்டுக் கூறவேண்டுமே தவிர, பொதுவாக சொல்லிவிட்டுச் சென்றுவிடக் கூடாது. எனவே, அந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடுவோம்” என்றார். இதனைத் தொடர்ந்து பேசிய வேல்முருகன், ”அமைச்சர் சிறப்பு நிதி ஒதுக்கி, இந்தக் கூட்டத்தொடர் முடிந்தவுடன் உடனடியாக எங்கள் தொகுதிக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

பின்னர் பேசிய சபாநாயகர், “நீங்கள் மூத்த உறுப்பினர். குற்றச்சாட்டுகளை சொல்லக்கூடாது. இந்த நேரத்தில் எது தேவையோ அதைத்தான் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதனையடுத்து அவை முன்னவர் துரைமுருகன், “உடனடியாக நிதி ஒதுக்குவது வழிமுறையல்ல. அடுத்த நிதியாண்டில், நிதி ஆதாரத்தைப் பொறுத்து உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும். உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது” என்றார். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.

  • ajith offers siruthai siva the next film but siva refused என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!