சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரம்.. முக்கிய ஆவணத்தை வெளியிடும் அண்ணாமலை!
Author: Hariharasudhan10 December 2024, 11:56 am
சட்டமன்றத் தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் DMK Files 3 வெளியிடப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
திருச்சி: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திருச்சி விமான நிலையத்தில் இன்று (டிச.10) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதுரை பகுதியில் விவசாயிகள் கடந்த ஒரு மாத காலமாக பெரிய போராட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதற்கு காரணம் மத்திய அரசு கிடையாது.
தமிழகம் உள்ளிட்ட சில பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கான ஒப்பந்தம் கோரப்பட்டு, அதற்கான ஒப்பந்தத்தை இந்துஸ்தான் நிறுவனம் பெற்றது. 10 மாதங்களாக எந்தவித பிரச்னையும் இல்லாமல் சென்று கொண்டிருந்தது. கிராம மக்கள் போராட்டம் அறிவித்த பிறகு, தமிழக அரசு அப்படியே தனது பேச்சை மாற்றி இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பது போன்று செயல்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தோம். டிசம்பர் 12ஆம் தேதி மத்திய அமைச்சர் எல்.முருகனும், நானும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியைச் சந்திக்க உள்ளோம். நல்ல முடிவோடு தான் தமிழகம் வருவோம்.
விவசாயிகளுக்கு சாதகமான தகவல் உடன் வருவோம். டங்ஸ்டன் விவகாரத்தில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார். திமுக பைல்ஸ் 1 மற்றும் 2 வெளியிட்டு உள்ளோம். சட்டமன்றத் தேர்தல் நெருங்குகின்ற நேரத்தில் திமுக பைல்ஸ் 3 (DMK Files 3) வெளியிடப்படும்.
இதையும் படிங்க: கையை பிடித்து இழுத்த போலீசாருக்கு பளார் : அரசுக்கு எதிராக பெண்கள் நடத்திய போராட்டத்தில் பரபரப்பு!!
அதில் திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணிக் கட்சிகள் எடுத்த டெண்டர்கள், அதனால் அவர்கள் பெற்ற லாபங்கள் குறித்தும் அம்பலப்படுத்தப்படும்” எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அண்ணாமலை, “விருதுநகரில் உதவி காவல் ஆய்வாளர் மாரிமுத்து தாக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் தமிழகம் முழுவதும் போலீசார் மீதான தாக்குதல் தொடர்கிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் என்பதால், இந்தியாவில் தொடர்ந்து தடை செய்யப்பட்டு வருகிறது.
ஒரு காலத்தில் விடுதலைப் போராட்டமாக ஆரம்பித்த விடுதலைப் புலிகள் போராட்டம், பல்வேறு பழிவாங்கும் படுகொலைகளை நிகழ்த்தியதால், அது பயங்கரவாத இயக்கமாக மாறியது. எனவே, இலங்கையிலும், இந்தியாவிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும், இதுகுறித்து பேசுவதற்கு ஒன்றுமில்லை.
கடந்த மூன்று மாதமாக பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிரப் பணியாற்றியுள்ளனர். இதனால் பாஜக எழுச்சி கண்டுள்ளது. ஆதிதிராவிட நலத்துறை சார்பில் நடத்தப்படும் தொழிற்பயிற்சியில் முடி திருத்துதல், இஸ்திரி போடுதல் உள்ளிட்ட தொழில்கள் கற்றுத் தரப்படுகின்றன. இது குலக்கல்வி இல்லையா?” என்றார்.