‘மாப்பிள்ளை அரசாங்கம்’.. திமுக அரசை கடுமையாக சாடிய வானதி சீனிவாசன்!
Author: Hariharasudhan16 December 2024, 1:27 pm
மாநில அரசு பொறுப்பில் பள்ளிக்கல்வித் துறையை சரியாக அணுக முடிவதில்லை என கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறி உள்ளார்.
கோயம்புத்தூர்: கோவை மாநகராட்சியின் வார்டு எண் 70 மா.ந.க வீதியில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், கோவை தெற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் கோவை மக்கள் சேவை மையம், தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இந்த நிலையில், இதனை வானதி சீனிவாசன் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய வானதி சீனிவாசன், “மருத்துவ முகாம் கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் நடத்தி வருகிறோம். குறிப்பாக, மழைக் காலத்தில் உடல் நலம் தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது.
கோவை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் சரியாக எடுக்கப்படாததால் மிகப்பெரிய சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. குப்பை வண்டிகள் இல்லாதது, தூய்மைப் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக மிகவும் தாமதமாக குப்பைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
அதிகமான வருவாய் கொடுக்கும் கோவை மாநகராட்சியில் மக்கள் தரமான வாழ்க்கை வாழ்வதற்கான கட்டமைப்பை மாநில அரசு ஏற்படுத்தி தராதது கண்டனத்துக்குரியது. சட்டப் பேரவை கூட்டத் தொடர் 2 நாட்கள் நடத்தியது, ஏதோ பெயருக்கு நடத்தி முடிக்க வேண்டும் என்பதால் தான் செயல்பட்டு உள்ளதாக தோன்றுகிறது.
தமிழகம் மாதிரியான மிகப்பெரிய மாநிலத்தில் பல்வேறு துறைகளைக் கொண்ட மிக வேகமாக வளர்ந்து வரும் மாநிலத்தில், பிரச்னைகளைப் பற்றி ஆக்கப்பூர்வமாக விவாதம் நடத்த சட்டமன்றத்தில் நாட்களைக் குறைத்தது ஏமாற்றமாக உள்ளது.
4 – 5 சட்டமன்றம் கூடுகிறது என்பதால், 4 நிமிடங்களில் முடிக்கச் சொல்வதுடன், அனைவருக்கும் அந்த வாய்ப்பும் கொடுக்கப்படுவதில்லை.
அதனால் மக்கள் பிரச்னைகளை மக்களிடம் கொண்டு செல்ல முடிவதில்லை. ஆட்சிக்கு வருவதற்கு முன் 100 நாட்கள் சபை நடத்துவோம், ஒரு வருடத்திற்கு என கொடுத்த வாக்குறுதிகள் மற்ற வாக்குறுதிகள் போல் காற்றில் பறக்க விடப்பட்டது. டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக மாநில அரசின் கோரிக்கைகள், எதிர்ப்பை சட்டமன்றத்தில் தெரிவித்து உள்ளனர்.
திமுகவைப் பொறுத்தவரை ஏதாவது பிரச்னை என மத்திய அரசை எதிர்க்க வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக அரசியல் செய்வதன் வாயிலாக, தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்பது மட்டும் தான் திமுக வின் நிலைப்பாடு. மோடி, மத்திய அரசை குறை சொல்வதற்கான அரசியல் வாய்ப்பை உருவாக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெகவுக்கு தாவல்? ஆதவ் அர்ஜூனா ஹிண்ட்.. திமுக அமைச்சரின் பல்டி!
பல்வேறு துறைகளில் மாநில அரசு தோல்வியைச் சந்தித்து வருகிறது. மாநில அரசின் பல்வேறு குறைபாடுகளுடன் மழை பாதிப்புகளும் சேர்ந்து உள்ளன. மாநில அமைச்சர்கள் வரும் போது மக்களால் காட்டப்படும் கோபம் என்பது 5 சதவீதம் தான். மீதம், எப்போது இந்த ஆய்வு தூக்கி எறிவோம் என காத்து வருகின்றனர்.
ஆனால் முதல்வர், அமைச்சர்கள் சிறிதும் பொருட்படுத்தாமல் உள்ளனர். இதற்கான பலனை 2026-ல் அனுபவிப்பார்கள். மக்களுடைய பிரச்னையை காது கொடுத்து கேட்கக் கூட அரசு தயாராக இல்லை என்பது வேதனை அளிக்கக் கூடிய விஷயம். கல்வி பொதுப்பட்டியல் என்பது நீண்ட நாட்களாக தமிழகத்தில் பேசப்பட்டு வருகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் மேற்கொள்வதன் வாயிலாகத் தான் இதைக் கொண்டு வர முடியும். பொதுக் கருத்தை எட்டுவதற்கு மாநில கட்சிகள் கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். கல்வி என்பது அடிப்படை, ஆரம்பக் கல்வி முழுக்க, முழுக்க மாநில அரசு சார்ந்து உள்ளது.
உயர் கல்வி என்பதில் பெரும்பாலான உதவிகளை மத்திய அரசு வழங்குகிறது. மத்திய அரசுக்கு ஒரு பங்கு உள்ளது. உயர்கல்வித் துறையில் பெரும்பாலான உதவிகளை நாம் என்ன செய்யப் போகிறோம், அதற்கான அணுகுமுறை என்பதை தெளிவாகச் சொல்ல வேண்டும்.
ஆரம்பக் கல்வியில், அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, வகுப்புகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணங்களால் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்து உள்ளது. அடிப்படை வசதிகளைக் கூட சரி செய்ய முடியாத நேரத்தில், மாநில அரசு பொறுப்பில் பள்ளிக்கல்வித் துறையை சரியாக அணுக முடிவதில்லை.
இதுதொடர்பாக தீவிர விவாதம் நடத்தப்பட வேன்டும். கல்வி மாநிலப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அதிமுக பொதுக்குழு தீர்மானம் தொடர்பான கேள்விக்கு எம்எல்ஏக்களுக்கு சிறப்பு நிதி கொடுக்கிறோம் என்ற அறிவிப்புக்கு, வழக்கமான அரசுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து இதுதான் என கொடுப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
சாலைகள் எங்கும் சரியில்லை, அதற்கென்று கொடுக்கின்ற நிதி எங்கு செல்கிறது? நிதி ஒதுக்கீடு என்று சொன்னாலும், வேலைகள் எதுவும் நடப்பதில்லை. கோவை அரசு மருத்துவக் கல்லூரி அடுக்குகள் கொண்ட வாகன நிறுத்துமிடம் வேண்டும் என கேட்டதற்கு, சாத்தியமில்லை என்கின்றனர்.
வாகனப் பெருக்கம் அதிகரிக்கும் நிலையில், நவீன வகையில் வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். ஆனால் எந்த தொலைநோக்குப் பார்வையும் இல்லாத அரசிடம் என்ன எதிர்பார்க்க முடியும். மாநில அரசின் நிதிப் பகிர்வு தொடர்பாக ஆணையத்தால் நடத்தப்பட்டது. அரசாங்க நடைமுறையாக பார்க்காமல் அனைத்து அரசியல் கட்சிகள் கருத்துக்கள் கேட்கப்படுகிறது.
அடுத்த முறை புதிய கூட்டத்தின் போது இந்த கருத்துக்கள் அனைத்தும் எடுத்துக் கொள்ளப்படும். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிதிப் பகிர்வு தொடர்பான தீர்மானம் தொடர்பான கேள்விக்கு பதில் அவர், திமுக அமைச்சர்கள், முதல்வர் எந்த உலகத்தில் வாழ்ந்து வருகின்றனர் எனத் தெரியவில்லை.
ஊடகத்தில் அமைச்சர்களின் பதில்கள், நடைமுறையில் என்ன என்பதை சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் பதிவிடுகின்றனர். ஒரு மகாராஜா மனப்பான்மையில் தான் அமைச்சர்கள் உள்ளனர். நீர் மேலாண்மையில் முன்னோர்கள் மிக அழகாக திட்டமிட்டு உருவாக்கி விட்டுச் சென்ற நிலையில், ஆளுங்கட்சி அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, குடியிருப்புகள் அனுமதிப்பது, உயர் நீதிமன்ற உத்தரவிட்ட இடங்களிலும் செய்யப்படுவதில்லை, மாற்று ஏற்பாடும் செய்வதில்லை.
நீர்நிலை ஆக்கிரமிப்பு நீக்கப்படாததால் மழைக் காலங்களில் அதற்கென்று அதிகமான கோடிகளை மக்கள் வரிப் பணத்தில் செலவிட வேண்டி உள்ளது. அதானியை நான் சந்திக்கவில்லை என முதல்வர் சொல்கிறார். இது மாப்பிள்ளையின் அரசாங்கம் என திமுக கட்சியினர் சொல்கின்றனர்.
எங்கள் மாநிலத் தலைவர் முன் வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லுங்கள். வெற்றி பெற்றவர்களுக்கு சட்டப் பேரவையில் பதில் சொல்வதற்கு கூட மின்சாரத்துறை அமைச்சர் இல்லை” எனக் கூறினார்.