அல்லு அர்ஜூன் நடிப்பில் சமீபத்தில் வெளியான புஷ்பா 2, 11 நாட்களில் 1,409 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்: கடந்த 2021ஆம் ஆண்டு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த நிலையில், படம் மெகாஹிட் அடித்தது.
அதேபோல், இப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் என முதல் பாகத்தின் இறுதியிலே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில், புஷ்பா தி ரூல் என்ற தலைப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியானது. இதற்கும் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருகிறது.
இந்த ஆதரவு விமர்சனங்கள் மற்றும் கருத்துகள் வாயிலாக மட்டுமல்லாமல், வசூல் ரீதியாகவும் மிகவும் பிரமாண்டமாகத் தெரிகிறது. காரணம், புஷ்பா 2 படம் வெளியான 11 நாட்களில் ஆயிரத்து 409 கோடி வசூலைக் குவித்து உள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இதற்கு அல்லு அர்ஜுனின் தனித்துவமான நடிப்பு, கிளாமர் கலந்த பாடல்கள், பின்னணி இசை ஆகியவை முக்கியக் காரணியாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், ராஷ்மிகாவின் நடன அசைவுகள், அதற்கு அல்லுவின் ரியாக்ஷன் ஆகியவை மீம்ஸ்களால் எதிர்மறைக் கருத்துகளைக் கொண்டே நிரம்பி வருகிறது.
இதையும் படிங்க: பாலா சிஷ்யன் பாணியில் சூரி.. பிரபல நடிகையுடன் வெளியான முக்கிய அப்டேட்!
அதேநேரம், சமீபத்தில் ஹைதராபாத்தில் படம் பார்க்கச் சென்ற பெண் உயிரிழந்தது தொடர்பாக அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. இதனையடுத்து, அவர் ஒரு நாள் சிறையில் இருந்த நிலையில், ஜாமீனில் மறுநாள் வெளி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.