போலீஸ் ஸ்டேஷன் அருகே நடக்கும் செயலா இது? இளம்பெண் கைது!
Author: Hariharasudhan17 December 2024, 11:15 am
சென்னை எழும்பூரில் காரில் வைத்து மெத்தபெட்டமைன் போதைப்பொருளைக் கடத்திய இளம்பெண் உள்பட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை: சென்னை எழும்பூர் காவல் நிலையம் அருகே போதைப்பொருள் கடத்தப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இந்தத் தகவலின் அடிப்படையில், எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு, சந்தேகப்படும் படியான முறையில் நின்று கொண்டிருந்த சொகுசு காரை தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அந்த காரில் இருந்த இரண்டு பேர் அங்கு இருந்து தப்பி ஓடினர். எனவே, காரில் இருந்த இளம்பெண் மற்றும் ஒருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில், அசாம் மாநிலத்தில் இருந்து மெத்தபெட்டமைன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை வாங்கி வந்து விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சோதனைச் செய்யப்பட்ட காரில் இருந்து 705 கிராம் மெத்தபெட்டமைன் மற்றும் 6 கிலோ கஞ்சா மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது.
இதன் மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் ஆகும். இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் நடத்திய விசாரணையில், காரில் இருந்த நபர் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பதும், அவர் காய்கறி வியாபாரம் செய்து வருவதும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: அதிகாலையில் கோரம்.. டிப்பர் லாரி மோதி சிதறிப் போன வாகன ஓட்டியின் உடல்.!!
மேலும், காரில் அவருடன் இருந்த இளம்பெண், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாத்திமா பேகம் என்பதும், இவர் அங்கு இருந்து போதைப் பொருட்களைக் கடத்தி வந்து பாலசுப்ரமணியனிடம் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது. அது மட்டுமல்லாமல், தப்பியோடிய நபர்கள் சாய்தின் மற்றும் முசாபர் ஆகிய இரண்டு இளைஞர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.