போலீஸ் மனைவிக்கு அரசு மருத்துவமனையில் நடந்த கொடூரம்.. வேலூரில் பரபரப்பு!
Author: Hariharasudhan17 December 2024, 12:46 pm
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட தாயும், சேயும் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வேலூர்: வேலூர் மாவட்டம், மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனிதா. அனிதா, நிறைமாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார். இந்த நிலையில், அவருக்கு பிரசவ வலி வரவே, அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனிதா அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதனையடுத்து, அவருக்கு சிகிச்சை தொடங்கி உள்ளது. இதனிடையே, நேற்று இரவு வலி அதிகமானதால், அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்கலாம் என மருத்துவர் வெண்ணிலா உறவினர்களிடம் கூறி உள்ளார். இதன் பேரில், இன்று (டிச.17) அதிகாலை அனிதாவுக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்து உள்ளது.
அதேநேரம், அனிதாவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். இந்த நிலையில், காலை 8 மணியளவில் அனிதாவும் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தாயும், சேயும் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
அதேபோல், இது தொடர்பாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்து உள்ளனர். மேலும், தாயும், சேயும் உயிரிழந்த தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மருத்துவமனையில் குவிந்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது. மேலும், இது குறித்து கணியம்பாடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: போலீஸ் ஸ்டேஷன் அருகே நடக்கும் செயலா இது? இளம்பெண் கைது!
முன்னதாக, கடந்த சில மாதங்களாக அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் இறப்பு என்ற செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. எனவே, மருத்துவர்கள் மீது சிறப்புக் கவனத்தை அரசு செலுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.