’காருக்கு இருக்கும் மதிப்பு என் மகனுக்கு இல்லையா?’.. 9 மணிநேரமாக திக் திக்.. கதறும் தாய்!
Author: Hariharasudhan18 December 2024, 12:02 pm
சென்னை துறைமுகத்தில் ரிவர்ஸ் எடுத்தபோது கார் கவிழ்ந்து கடலுக்குள் விழுந்த நிலையில், 9 மணிநேரமாக ஓட்டுநரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சென்னை: சென்னை துறைமுகத்தில் இருந்த கடலோர காவல்படை வீரர் ஒருவரை அழைத்துச் செல்வதற்காக தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் கார் ஒன்று இன்று அதிகாலை அங்கு வந்துள்ளது. இந்தக் காரை கொடுங்கையூரைச் சேர்ந்த முகமது சகி என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில், துறைமுகத்தில் கடலோர காவல் படை வீரரை ஏற்றிக்கொண்டு, ஓட்டுநர் முகமது சகி காரை ரிவர்ஸ் எடுத்துள்ளார். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், நிலை தடுமாறி கடலுக்குள் பாய்ந்து உள்ளது. அப்போது, உடனடியாக காரின் கதவை உடைத்து கடலோர காவல் படை வீரர் தப்பி உள்ளார்.
ஆனால், கடலில் இருந்து வெளியே வந்த காவல் படை வீரர், அங்கேயே மயங்கி விழுந்து உள்ளார். இதனையடுத்து, அங்கு இருந்த சக கடலோர காவல் படை வீரர்கள், மயங்கிய வீரரை மீட்டு, உடனடியாக ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேநேரம், கடலில் மூழ்கிய கார் ஓட்டுநர் முகமதி சகியை மீட்கும் பணியும் தொடங்கியது. இந்தப் பணியில் 30க்கும் மேற்பட்ட கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் 20க்கும் மேற்பட்ட தீயணைப்புப் படை வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர். மேலும், கிரேன் மூலம் கார் மீட்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ‘அவர உனக்கு தெரியாதா?’.. வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. நடந்து வந்தவருக்கு அரிவாள் வெட்டு.. நெல்லையில் பயங்கரம்!
ஆனல், கார் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், 9 மணி நேரமாக ஓட்டுநரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டுநர் முகமது சகியின் தாய் உள்பட உறவினர்கள், மீட்புப்பணி குறித்து போலீசார் உரிய பதில் அளிக்கவில்லை என குற்றம் சாட்டி உள்ளனர்.