நெல்லை கோர்ட் வாசலில் இளைஞர் கோர கொலை.. 3 தனிப்படைகள் அமைப்பு!
Author: Hariharasudhan20 December 2024, 12:02 pm
நெல்லை நீதிமன்ற வாசலில் இளைஞர்கள் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று (டிச.20) காலை கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் வழக்கில் ஆஜராவதற்காக நீதிமன்ற வாசலில் இருந்து உள்ளார்.
அப்போது அங்கு திடீரென வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அவரைச் சுற்றி வளைத்து நீதிமன்ற வளாகத்திற்குள் விரட்டி உள்ளனர். பின்னர் அவர் ஒடிய நிலையில் மீண்டும் நீதிமன்ற வாயில் அருகே வந்துள்ளார். அந்த நேரத்தில், அவர் நீதிமன்ற வாசலிலே வைத்து கொடூரமான முறையில் முகம், கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இதன் பின்னர் 4 பேரும் அங்கிருந்து காரில் தப்பியோடி உள்ளனர். பின்னர், இது குறித்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தக் கொலையில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் பிடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் போலீஸ் எஸ்ஐ ஒருவர் தடுக்க முயன்றதாகவும் கூறினார்.
இதையும் படிங்க: பையோடு சென்ற கணவன்.. துரத்திய நாய்.. துண்டு துண்டான மனைவி.. குமரியில் பயங்கரம்!
இதனிடையே, இந்தப் படுகொலைச் சம்பவத்தைக் கண்டித்து நீதிமன்றத்தின் அருகே உள்ள வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என முழக்கமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.