’இதுதான் சரியான நேரம்’.. அமித்ஷா செய்துவிட்டார்.. பா.ரஞ்சித் பரபரப்பு கருத்து!
Author: Hariharasudhan20 December 2024, 6:45 pm
அம்பேத்கரின் பெயருக்குப் பின்னால் இருக்கும் மிகப்பெரிய சக்தியை அவர்கள் (பாஜகவினர்) உணர்ந்திருப்பார்கள் என திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கூறி உள்ளார்.
சென்னை: சென்னையில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டார். இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், அம்பேத்கர் குறித்து மாநிலங்களவையில் அமித்ஷா பேசியதும், அதற்கான எதிர்ப்புகளும் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த பா.ரஞ்சித், “அம்பேத்கரை யாராலும் வெறுக்கவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது, அவரைப் புறந்தள்ளவும் முடியாது. அம்பேத்கர் இல்லாமல் நவீன இந்தியாவை கட்டியயெழுப்ப இயலாது. இதனை அமித்ஷாவும், அவரது கட்சியினரும் புரிந்து கொண்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.
ஏனென்றால், அவர் பேசிய பின்னர் ஒரு பெரிய அலையே மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அம்பேத்கரின் பெயருக்குப் பின்னால் இருக்கும் மிகப்பெரிய சக்தியை அவர்கள் உணர்ந்திருப்பார்கள் என்றும் நினைக்கிறேன். அம்பேத்கரின் கருத்துகளைக் கொண்டு நம்முடைய சிஸ்டத்தில் இருக்கும் பிரச்னைகளை சரி செய்வதற்கான நேரம் இது எனவும் நான் நினைக்கிறேன்” எனக் கூறி உள்ளார்.
முன்னதாக, பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் எக்ஸ் தளப் பக்கத்தில், “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்” என்று சொல்வோம், அது தான் உங்கள் பாசிச அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வரப் போகிறது. அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வோம், அது உங்கள் மனுதர்ம கனவை நிறைவேற்றாமல் தடுக்கப் போகிறது.
நேற்று அத்வானி, இன்று அமித்ஷா. நீங்கள் துடைத்தெறியப்பட்டு வரலாற்றில் தேடினாலும் கிடைக்காத காலத்தில், பாபாசாகேப் தன் தத்துவத்தால் இன்னும் கூட தீர்க்கமாய் நிலைபெற்றிருப்பார். ஆகையால் பாசிஸ்டுகள் சோர்வடைய வேண்டாம். அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்” எனக் குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படிங்க: திடீரென அழுத 3 வயது சிறுமி.. 9 வயது சிறுவனின் பகீர் பதில்!
என்ன நடந்தது? “எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஃபேஷனாகி விட்டது. அதற்குp பதிலாக கடவுளின் பெயரை அத்தனை முறை கூறியிருந்தால் கூட, உங்களது 7 பிறவிக்கும் சொர்க்கத்தில் இடமாவது கிடைத்திருக்கும்” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவையில் கூறியிருந்தார்.
இந்தப் பேச்சு சர்ச்சையான நிலையில், அடுத்த இரண்டு நாட்களாக இந்தியா கூட்டணி உள்ளிட்ட எதிர்கட்சிகளால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. மேலும், பாஜக எம்பியை தள்ளிவிட்டதாகவும், அசெகரியகமாக பாஜக பெண் எம்பி உணர்ந்ததாகவும் மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.