தந்தை – மகன் – பேரன் புகழ்பாடும் தமிழக சட்டப்பேரவை.. வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு!

Author: Hariharasudhan
21 December 2024, 6:43 pm

நாடாளுமன்றம் பற்றி கவலைப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயல்பாடுகள் பற்றி கொஞ்சம் கவலைப்பட்டால் நல்லது என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: இது தொடர்பாக தேசிய பாஜக மகளிரணித் தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில், “கடந்த நவம்பர் 15ஆம் தேதி தொடங்கி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 20ஆம் தேதி நிறைவுற்றது.

அதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “அவையை நடத்த விரும்புவதை விட- அவையை முடக்க வேண்டும், அரசின் தோல்விகள் குறித்த எந்த விவாதமும் நடைபெற்று விடக்கூடாது என்பதையே மனதில் வைத்து பாஜக எம்பிக்கள் செயல்பட்டதை நாம் காணமுடிந்தது.

ஆக்கப்பூர்வமான விவாதம் செய்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்பது நாடாளுமன்றத்தைப் பொறுத்தமட்டில் அரிதான நிகழ்வாக பாஜக ஆட்சியில் மாறி விட்டதை எண்ணி ஒரு மிகப்பெரிய ஜனநாயக இயக்கமாம் தி.மு.கழகம் கவலை கொள்கிறது” எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையை கூட்டத்தை இரண்டு நாட்கள் மட்டுமே நடத்திவிட்டு, ஒரு மாதத்திற்கு மேலாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்திய பாஜக கூட்டணி அரசை நோக்கி, கொஞ்சங்கூட மனசாட்சி இல்லால் பழி சுமத்தியுள்ள முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Vanathi Srinivasan Condemns DMK govt in their assembly sessions

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கிய நாள் முதல், பெரும்பாலான நாட்கள் செயல்படாமல் போனதற்கு பாஜக காரணமல்ல என்பது, அவை நடவடிக்கைகளை நேரலையாகப் பார்த்த அனைவரும் அறிவார்கள். ஹரியானா, மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்களில் ‘இண்டி’ கூட்டணியை மக்கள் ஓடஓட விரட்டிய பிறகும், பாடம் கற்காமல், திட்டமிட்டு நாடாளுமன்றத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் முடக்கின.

முதல் நாளில் தொழிலதிபர் அதானி விவகாரத்தை கிளப்பி அவையை ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் முடக்கின. அம்பேத்கரின் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றும் கட்சிகளை அம்பலப்படுத்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதை திசைதிருப்பி கடைசியில் சில நாட்கள் அவையை முடக்கினார்கள்.

நாடாளுமன்றம் முழுமையாக நடந்து விடக்கூடாது, மோடி அரசு எந்தவொரு சட்டத்தையும் கொண்டு வந்து விடக்கூடாது என்ற குறுகிய நோக்கத்தோடு செயல்படுவதை இப்போது அம்பலமாகியிருக்கிறது. நாடாளுமன்றம் பற்றி கவலைப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டப்பேரவையின் செயல்பாடுகள் பற்றி கொஞ்சம் கவலைப்பட்டால் நல்லது.

கடந்த 2021 தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவையை நடத்துவோம், பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் நேரலை செய்வோம் என வாக்குறுதி அளித்தார்கள். ஆனால், ஆண்டுக்கு 30 நாட்கள் கூட தமிழ்நாடு சட்டப்பேரவை நடப்பதில்லை.

குறைந்தது ஒரு வாரம் நடந்து வந்த குளிர்கால கூட்டத்தொடர் வெறும் இரண்டே நாளில் முடிந்துள்ளது. முதலமைச்சர், அமைச்சர்கள், ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் பேசுவது மட்டுமே நேரலை செய்யப்படுகிறது. அரசை விமர்சித்து ஒரு வார்த்தை பேசத் தொடங்கினால், உடனே நேரலை நிறுத்தப்படுகிறது.

இப்படி ஜனநாயகத்தை காலில் போட்டு மிதிக்கும் பாசிச அரசு, நாடாளுமன்றத்தை அதிக நாட்கள் நடத்தும் பாஜகவை குறை சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் திமுக அரசை, முதலமைச்சர் ஸ்டாலினை, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி பேசினால் மட்டுமே தொடர்ந்து பேச முடியும்.

அரசின் தவறுகளை அழகிய தமிழில் மென்மையான வார்த்தைகளால் சுட்டிக்காட்டி முனைந்தால் கூட, பேரவைத்தலைவர் உடனே உரத்த குரலில் குறுக்கிடுவார். ஒலிவாங்கி இணைப்பு துண்டிக்கப்படும். இதுதான் திமுக ஜனநாயகத்தை காக்கும் லட்சணம்.

தொகுதி பிரச்னைகளைப் பேச முற்பட்டால் கூட, எழுதி கொடுத்து விடுங்கள். நன்றி சொல்லி முடிங்க எனக்கூறி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்களின் உரிமையைப் பறிக்கிறார் பேரவைத்தலைவர். தமிழ்நாடு சட்டப்பேரவை எப்படி நடக்கிறது என்பதை திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் வென்று திமுக உறுப்பினராக சட்டப்பேரவையில் இருக்கும் வேல்முருகனிடம் கேட்டால் சரியாகச் சொல்வார்.

இதையும் படிங்க: திமுகவுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் திருமா பேசுகிறார்.. அண்ணாமலை குற்றச்சாட்டு!

சட்டப்பேரவையில் தன்னைப் பேச விடுவதில்லை. பேச எழுந்தால் அமைச்சர்கள் கிண்டலடிக்கிறார்கள் என ஆளுங்கட்சி எம்எல்ஏவே பகிரங்கமாக ஊடகங்களில் பேட்டி அளிக்கிறார். அந்த அளவுக்கு ஜனநாயகத்தை புறந்தள்ளி தந்தை ‘(கருணாநிதி) – மகன் (மு.க.ஸ்டாலின்) – பேரன் (உதயநிதி ஸ்டாலின்)’ புகழ்பாடும் மன்றமாக, தமிழ்நாடு சட்டமன்றத்தை மாற்றியவர்கள், ஜனநாயகத்தை மதித்து, அனைத்துத்தரப்பினருக்கும் வாய்ப்பளித்து நாடாளுமன்றத்தை நடத்தும் பாஜகவை குறை சொல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வார்த்தைகளிலேயே சொல்கிறேன். இனியும் திமுக அரசு திருந்தவில்லை என்றால், ஜனநாயக உரிமைகளை மதித்து நடக்கவில்லை என்றால் தமிழ்நாட்டு மக்கள் உரிய நேரத்தில் மீண்டும் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்பது உறுதி” எனத் தெரிவித்து உள்ளார்.

  • Sarathkumar in The Smile Man நான் UNCLE-ஆ…”தி ஸ்மைல்மேன்”பட விழாவில் ஆவேசம் அடைந்த சரத்குமார்..!
  • Views: - 56

    0

    0

    Leave a Reply