திமுக கவுன்சிலர் தலைமையில் திடீர் மறியல்.. மேயர் வந்ததால் பாதியில் விலகிய கவுன்சிலர்!
Author: Udayachandran RadhaKrishnan21 December 2024, 7:38 pm
திருச்சி காஜாமலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த விதமான அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு குற்றம் சாட்டை வருகின்றனர்.
இந்த காஜாமலை பகுதி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி ஆகும். இந்த பகுதியில் ஏராளமான பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரி இயங்கி வருகிறது.
இந்நிலையில் இந்த பகுதியில் அடிக்கடி சாலைகளில் சாக்கடை நீர் ஆறு போல் ஓடுவதால் துர்நாற்றம் அதிகளவில் வீசுகிறது. குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் குழந்தைகள், முதியோர், பெண்கள் என ஏராளமானோர் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகிறார்கள்.
இது போன்ற அனைத்து பிரச்சனைகளையும் அப்பகுதி மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜியிடம் பலமுறை பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டை வருகின்றனர்.
அப்பகுதி மாமன்ற உறுப்பினர் காஜாமலை விஜி கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிகாரியிடமும் மேயரிடமும் பிரச்சனைகளை குறித்து கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத தால்தான் தற்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்தனர்.
இதையும் படியுங்க: திமுகவுடன் இருக்க வேண்டிய கட்டாயத்தில் திருமா பேசுகிறார்.. அண்ணாமலை குற்றச்சாட்டு!
பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இடத்திற்கு நேரில் வந்த திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனை, அப்பகுதி மாமன்ற உறுப்பின காஜாமலை விஜி மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு ஒரு மாத காலத்திற்குள் காணப்படும் என மேயர் அன்பழகன் வாக்குறுதி அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இருப்பினும் அப்பகுதி கவுன்சிலரான காஜாமலை விஜியின் கோரிக்கைக்கு மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை என்பதால் காஜாமலை விஜி அறிவுறுத்தலின் பேரில்தான் இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் வெளிப்படையாகவே தெரிவித்தனர்.