21 வருடங்களாக கிடைக்காத அரசின் இலவச வீட்டு மனை பட்டா.. போலீசார் முன் எடுத்த விபரீத முடிவு!
Author: Hariharasudhan23 December 2024, 3:14 pm
21 ஆண்டுகளாக பட்டா கேட்டும் நடவடிக்கை எடுக்காததாகக் கூறி வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்: வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளது. இங்கு, இன்று மக்கள் குறைதீர்வுக் கூட்டம், ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது. இந்த குறைதீர் கூட்டத்திற்கு, வேலூர் அடுத்த பொய்கை சமத்துவ புரத்தைச் சேர்ந்த யசோதா (44) என்ற பெண் வந்தார்.
அப்போது, திடீரென தனது பையில் மறைத்து வைத்துக் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்று உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், உடனடியாக யசோதா மீது தண்ணீரை ஊற்றினர்.
இதனையடுத்து மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, யசோதாவிடம் விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில், நான், எனது கணவர் மற்றும் 2 மகள்களுடன் பொய்கை சமத்துவபுரத்தில் வசித்து வருகிறேன். சமத்துவபுரத்தில் எங்களுக்கு 5 சென்ட் நிலத்துடன், அரசு சார்பில் வீடு ஒதுக்கி செய்து தரப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை இடத்திற்கு உண்டான பட்டா எங்களுக்கு வழங்கவில்லை. இதனால் எங்களுடைய பின்புறத்தில் உள்ள வீட்டுக்காரர், அடிக்கடி உங்களுடைய பட்டாவுக்கு உண்டான ஆதாரத்தைக் காட்டுங்கள், இல்லையென்றால் காலி செய்யுங்கள் என மிரட்டல் விடுகிறார்.
இதையும் படிங்க: டிரெண்டிங்கான அல்லு அர்ஜுன்.. பின்னணியில் இப்படி ஒரு அரசியலா?
அது மட்டுமல்லாமல், எங்களுடைய இடத்தை அவர் அபகரிக்க முயல்கிறார். நான் கடந்த 21 ஆண்டுகளாக பட்டா கேட்டு பலமுறை மனு அளித்துள்ளேன். ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதிகாரிகள் வேண்டுமென்றே என்னை அலைக்கழித்து வருகின்றனர். எனவே, வீட்டு மனை பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதனையடுத்து, நாளை உங்களுடைய வீட்டிற்கு தாசில்தார், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக வந்து விசாரணை நடத்தி, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், எனவே, இது போன்ற விபரீதமான செயல்களில் ஈடுபடக் கூடாது என வருவாய் அலுவலர் மாலதி அறிவுறுத்தினார். யசோதாவின் கணவர் ஜீவா, கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார்.