வறட்டு கெளரவம்?.. BSNL நிலுவைத்தொகை விவகாரத்தில் அமைச்சர் முரண்பாடு.. அண்ணாமலை செக்!
Author: Hariharasudhan23 December 2024, 3:54 pm
BSNL நிறுவனத்திற்குச் செலுத்தப்படவேண்டிய நிலுவைத் தொகையான 1.5 கோடி ரூபாயை உடனடியாக செலுத்துங்கள் என பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர் எழுதிய கடிதத்தை அண்ணாமலை வெளியிட்டு உள்ளார்.
சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டு உள்ள எக்ஸ் தளப் பதிவில், “கடந்த 19.12.2024 அன்று, பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் எழுதிய கடிதத்தில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தப்படவேண்டிய நிலுவைத் தொகையான 1.5 கோடி ரூபாயை உடனடியாக செலுத்துங்கள் என்றும், இல்லையெனில் சேவை துண்டிக்கப்படும் என்று BSNL நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், BSNL நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டிய நிலுவைத் தொகை எதுவும் இல்லை என்று மீண்டும் பொய் சொல்லியிருக்கிறார். அப்படியானால், பள்ளிக்கல்வித்துறையின் தொழிற்கல்வி இணை இயக்குநர் பொய் சொல்கிறார் என்கிறாரா அமைச்சர்?
சாதாரண நிகழ்வுகளைக் கூட, சாதனைகள் போலக் காட்டிக் கொள்ளும் விளம்பர மாடல் ஆட்சியில், எந்தத் துறையும் தங்களுக்கான பணிகளைச் சரிவர மேற்கொள்வதில்லை. எனவே, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், வறட்டு கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் மீண்டும் பொய் சொல்வதை நிறுத்திவிட்டு, மாணவர்களின் கல்வியோடு விளையாடாமல் இணைய இணைப்புக்கான நிலுவைத் தொகையை உடனடியாகச் செலுத்த வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்து உள்ளார்.
முன்னதாக, குமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு, வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழா 25 – Statue of Wisdom என்ற கருப்பொருளை மையமாக வைத்து, இன்று (டிச.23) முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
இதையும் படிங்க: 21 வருடங்களாக கிடைக்காத அரசின் இலவச வீட்டு மனை பட்டா.. போலீசார் முன் எடுத்த விபரீத முடிவு!
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அன்பில் மகேஷ், “தமிழக பள்ளிக்கல்வித்துறை இணையதளக் கட்டணம் செலுத்தவில்லை என்பது தவறு. மத்திய அரசு கொடுக்க வேண்டிய நிதியைப் பற்றிப் பேச மறுக்கப்படுகிறது. எனவே, இணையதள இணைப்புக் கட்டணங்களை நிலுவையில் வைப்பதற்கான அவசியம் இல்லை.
மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய 2 ஆயிரத்து 151 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளுங்கள், அடுத்த அரைமணி நேரத்தில் நிதி கொடுக்கிறோம் என மத்திய அரசு கூறுகிறது” எனக் காட்டமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.