‘நான் எங்க அப்டி சொன்னேன்..’ இறக்கிய தவெக கொடி ஏற்றம்.. என்ன நடக்கிறது?
Author: Hariharasudhan24 December 2024, 9:52 am
அரியலூர் தவெக பெண் நிர்வாகி, கட்சியில் தனக்கு மதிப்பளிக்கவில்லை எனக் கூறி இறக்கிய கொடியை மீண்டும் நேற்று ஏற்றியுள்ளார்.
அரியலூர்: அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள தா.பழூர் ஒன்றியம் கார்குடி பகுதியைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி ஜெயபால். இவர் தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய மகளிரணி நிர்வாகியாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தவெக கொடியை கார்குடி பகுதியில் ஏற்றினார்.
பின்னர், தவெகவில் பெண்களுக்கு யாரும் மதிப்பு அளிப்பதில்லை, பெண்களுக்கு மதிப்பு அளிக்க வேண்டும் என விஜய் கூறினாலும், அதனைக் கட்சியினர் நடைமுறைப்படுத்துவதில்லை எனக் கூறி, தவெக கொடியை கீழே இறக்கினார். இது அரியலூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேநேரம், பிரியதர்ஷினி ஜெயபாலின் சகோதரர்கள் திமுக மற்றும் விசிகவில் இருப்பதாகவும், இதனால் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பிரியதர்ஷினி கொடியை இறக்கி கட்சியினர் மீது அவதூறு பரப்புவதாக அப்பகுதி தவெக தொண்டர்கள் கூறிய வீடியோவும் வைரலானது.
இந்த நிலையில், மீண்டும் தவெக கொடியை பிரியதர்ஷினி அதே இடத்தில் ஏற்றி வைத்தார். அப்போது, நான் தவெகவில் இருந்து வெளியேறுவதாக கூறவில்லை, எனக்கு சில முரண்பாடுகள் இருந்தது, எனவே, நான் தவெக கொடியை மீண்டும் ஏற்றுவேன் என பிரியதர்ஷினி செய்தியாளர்களிடம் கூறினார்.
இதையும் படிங்க: பள்ளி மாணவிகளுக்கு ஆபாச வீடியோ காட்டிய ஆசிரியர்… காத்திருந்த டுவிஸ்ட்!
இவ்வாறு தவெக பெண் நிர்வாகி, தனக்கு கட்சியினர் மதிப்பளிக்கவில்லை எனக் கூறி, ஏற்றிய கொடியை இறக்கிவிட்டு, மீண்டும் தான் கட்சியில் இருந்து விலகவில்லை எனத் தெரிவித்து, கொடியை ஏற்றி வைத்தது தவெகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.