கேல் ரத்னா விருதுக்கு தகுதி இல்லையா? மௌனம் கலைத்த மனு பாக்கர்!
Author: Hariharasudhan25 December 2024, 9:51 am
ஒரு தடகள வீரராக எனது நாட்டிற்காக விளையாடுவதும், செயல்படுவதும் எனது பங்கு என கேல் ரத்னா விருது விவகாரம் குறித்து மனு பாக்கர் கூறியுள்ளார்.
டெல்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற ஒலிம்பிக் நாயகியான மனு பாக்கரின் பெயர், இந்திய அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் கேல் ரத்னா விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட வீரர், வீராங்கனைகள் பட்டியலில் இடம் பெறவில்லை. இது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது.
விளையாட்டு வீரர்களின் சாதனைகளைக் கவுரவிப்பதற்காக, மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு விருது பெற தகுதி உடைய மற்றும் பரிந்துரைக்கப்பட்ட வீரர், வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் மனு பாக்கரின் பெயர் இல்லை.
இந்தப் பரிந்துரைக்கப்பட்ட வீரர், வீராங்கனைகள் பட்டியலில் இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா தடகள வீரர் பிரவீன் குமார் ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால், மனு பாக்கரின் பெயர் கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இல்லை.
மேலும், மனு பாக்கரின் பெயர் கேல் ரத்னா விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இல்லை என்பதற்கு, அவர் விருதுக்கு விண்ணப்பிக்கவில்லை என்று விளையாட்டு அமைச்சகத்தின் அதிகாரிகள் கூறினர். இருப்பினும், மனுவின் குடும்பத்தினர், அவர் உண்மையிலேயே தனது விண்ணப்பத்தை அனுப்பியதாக கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அல்லு அர்ஜூனால் சினிமாவை விட்டு விலகும் புஷ்பா பட இயக்குநர்.. திடீர் அறிவிப்பு!
இந்த நிலையில், மனு பாக்கர், “மிகவும் மதிப்புமிக்க கேல் ரத்னா விருதுக்கான எனது பரிந்துரைக்கான தற்போதைய பிரச்னை குறித்து, ஒரு தடகள வீரராக எனது நாட்டிற்காக விளையாடுவதும், செயல்படுவதும் எனது பங்கு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
விருதுகள் மற்றும் அங்கீகாரம் என்னை உந்துதலாக வைத்திருக்கிறது. ஆனால், அது என் குறிக்கோள் அல்ல. இதற்காக விண்ணப்பிக்கும்போதுஎன் தரப்பில் தவறு நடந்திருக்கலாம் என்று நான் நம்புகிறேன், அது சரி செய்யப்பட்டு வருகிறது. விருதைப் பொருட்படுத்தாமல், எனது நாட்டிற்காக அதிக பதக்கங்களை வெல்வதற்கு நான் உந்துதலாக இருப்பேன். இது அனைவருக்குமான வேண்டுகோள், தயவு செய்து இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம்” என தனது எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.