முந்திக்கொண்ட VJS.. விஜய்க்கு அடுத்தது யார்? 2024 தமிழ் சினிமாவின் டாப் பாக்ஸ் ஆபிஸ்!
Author: Hariharasudhan25 December 2024, 3:56 pm
2024ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படங்களில் விஜய் நடித்த கோட் படம் முதல் இடத்தில் உள்ளது.
சென்னை: ஒவ்வொரு வருடத்தின் கடைசி சில நாட்கள், நமக்குள் பல கேள்விகள் எழும். அதில், முதன்மையானது, இந்த வருடத்தில் யார்? இந்த வருடத்தின் சிறந்தது எது? என்பதுதான். அது, முக்கியமான பொழுதுபோக்குத் துறையான திரைத்துறைக்கு மிகக் கச்சிதமாக பொருந்தும்.
அந்த வகையில், United Film Distribution Association என்னும் நிறுவனம், 2024ஆம் ஆண்டில் அதிக அளவு வசூலைக் குவித்த தமிழ் திரைப்படங்களின் டாப் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்தப் பட்டியலானது, பல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சமர்பித்த வசூல் நிலவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோட்: ஏஜிஎஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் The Greatest of All Time. விஜய், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா உள்ளிட்ட பலர் நடித்து வெளியான இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் உலக அளவில் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.
அமரன்: கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் அமரன். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் வெளியான இப்படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் 320 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து உள்ளது.
வேட்டையன்: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ஜெய்பீம் புகழ் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வேட்டையன். அனிருத் இசையமைப்பில் வெளியான இப்படத்தில் ரஜினிகாந்த், மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் உலக அளவில் 240 கோடி ரூபாய் வசூலித்தது.
இதையும் படிங்க: சினிமானா உயிர்…போலீஸ் வேலையை தூக்கி வீசிய பிரபல நடிகர்…ஆதரவு கொடுத்த வெற்றிமாறன்.!
மகாராஜா: தி ரூட் நிறுவனத்தின் தயாரிப்பில், நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான ‘மகாராஜா’ படத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், சிங்கம்புலி, திவ்யபாரதி உள்ளிட்டோர் நடித்து இருந்தனர். சிறுமிகள் மீதான் பாலியல் வன்கொடுமையை த்ரில்லிங்காக எடுத்து வைத்திருந்த இப்படம் 200 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாகவும், சீனாவில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.
ராயன்: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், தனுஷ் இயக்கி நடித்த ‘ராயன்’ திரைப்படம் உலக அளவில் 160 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்படத்தில் சுந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா மற்றும் துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.