இனி செருப்பு போட மாட்டேன்.. என்னை நானே சாட்டையால் அடிப்பேன்.. அண்ணாமலை பரபரப்பு பேச்சு!
Author: Hariharasudhan26 December 2024, 5:07 pm
அண்ணா பல்கலை விவகாரத்தில் நீதி கிடைக்கும் வரை காலணி அணியப் போவது இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோயம்புத்தூர்: கோவை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (நவ.26) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சில நேரங்களில் எதற்கு அரசியலில் இருக்கின்றோம் என்ற எண்ணம் வருகிறது. நான் அரசியலில் தொடர வேண்டுமா என நினைக்கிறேன்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் கொடூரமாக சித்திரவதை செய்து இருக்கும் செயல் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது திமுகவில் வட்டப் பொறுப்பில் இருக்கும் நபர் தான். அமைச்சர்களுடன் நின்று அவர் படம் எடுத்து இருக்கிறார்.
ஆனால், அவர் கட்சிப் பொறுப்பாளர் இல்லை எனக் கூறுகின்றனர். ஆனால், அவர் பொறுப்பில் இருக்கின்றார். முரசொலியில் வந்து இருக்கின்றது. இனி ஆரோக்கியமான அரசியல், மரியாதை, வெங்காயம் எல்லாம் கிடையாது. எங்களை நாங்களே வருத்திக்கொண்டு போராட உள்ளோம்.
நாளை எனக்கு நானே சாட்டையடித்துக் கொள்ளும் போராட்டத்தை நடத்தப் போகிறேன். என் இல்லத்திற்கு வெளியில் நின்று சாட்டையடித்துக் கொள்ள போகிறேன். தொண்டர்களும் இதைச் செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. அவர்கள், வீட்டு வாசலில் நின்றால் போதும்.
மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கு வேறு வழியில்லை. நடுத்தர மக்கள் வெளியில் வர வேண்டும். ஊடகத்தில் இதனை விவாதிக்க வேண்டும். இதைப் பற்றிப் பேச வேண்டும். இந்தச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று ஆணையர் பதவி விலக வேண்டும். குறைந்தது டெபுடி கமிஷனர் பதவி விலக வேண்டும்.
இதையும் படிங்க: பெண் போலீசிடம் அத்துமீறல்.. ராஜபாளையம் எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்!
சிசிடிஎன்எஸ் நெட்வொர்க்கில் இருந்து எப்படி FIR வந்தது? அந்தப் பெண் சரியில்லாதவர் என்பதைக் காட்ட வேண்டும் என்பதற்காக இதை வெளியிட்டு உள்ளனர். நீதி கிடைக்கும் வரை காலணி அணியப் போவது கிடையாது. கை, கால் உடைப்பு ஒரு தண்டனையா? உண்மையான அரசாக இருந்தால் 10 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, தண்டனை கொடுக்க வேண்டும்.
அண்ணாமலைக்கு பொய் சொல்வது மட்டும் தான் வேலை என அமைச்சர் ரகுபதி சொல்கிறார். தப்பு செய்தால் சொல்வது எங்கள் வேலை, பதில் சொல்வது உங்களுடைய வேலை” எனக் கூறினார். முன்னதாக, அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள நிலையில், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.