யார் அந்த 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள்? ஐகோர்ட் அமைத்த சிறப்பு விசாரணை குழு!
Author: Hariharasudhan28 December 2024, 3:57 pm
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க உள்ளது.
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இரண்டாம் ஆண்டு மாணவி, கடந்த டிசம்பர் 23ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர்கள் வரலட்சுமி மற்றும் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நேற்று விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறை, அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க உத்தரவிட்டது. இதனையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில், “FIR கசிந்த விவகாரத்தில் 14 பேர் அடையாளம் காணப்பட்டு, கண்கானிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செல்போன் நிறுவனத்திடம் இருந்தும் குறிப்பிட்ட தகவல்கள் கேட்கப்பட்டு உள்ளன. இதன் முதற்கட்ட விசாரணையில், ஒரு குற்றவாளி மட்டுமே இருப்பதாக காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.
ஆனால், தொடர் விசாரணைக்குப் பின்புதான் வேறு யாருக்கு தொடர்பு உள்ளது என்பது தெரிய வரும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நீதிபதி அமர்வு, “ஆண், பெண் இருபாலரும் சமம் என்ற நிலை நிச்சயமாக உருவாக வேண்டும். பெண்களுக்கு இந்த சமுதாயத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: ‘குடும்பத்தில் இருந்து இன்னொருவரா? எனக்கு அப்டி யாரும் வேணாம்’.. ராமதாஸ் – அன்புமணி மோதல்!
பெண்கள் மீது மட்டும் குற்றம் சாட்டப்படுவது என்பது குற்றவாளிக்கு சாதகமாகிவிடும். தனிப்பட்ட முறையில் பெண்கள் பேசுவது ஒன்றும் தவறில்லை. அது அவர்களுக்கான உரிமை, அதில் யாரும் தலையிட முடியாது. ஆண் என்பதற்காக, பெண்களைத் தொட உரிமை இல்லை. பெண்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்பதை இந்தச் சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டும்.
மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரணை செய்யும்” என உத்தரவிட்டனர். இதன்படி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை ஆவடி துணை ஆணையர் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா மற்றும் அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா ஆகியோர் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்க உள்ளது.