ஆளுநரைச் சந்திக்கும் விஜய்.. முக்கிய காயை நகர்த்துகிறாரா தவெக தலைவர்?

Author: Hariharasudhan
30 December 2024, 12:13 pm

அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநரைச் சந்திக்கும் நிலையில், முதல் முறையாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சந்திக்கிறார்.

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று பிற்பகல் 1 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காரணம், அண்ணா பல்கலை பாலியல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படி 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவும், தேசிய மகளிர் ஆணையத்தின் 2 நபர்கள் கொண்ட குழுவினர் தனித்தனியே தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, ஆளுநரைச் சந்திப்பது என்பது பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் செய்து வந்தன.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆளுநரைச் சந்திப்பது கவனம் பெற்றுள்ளது. முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், ” சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே, மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது செய்யப்பட்டிருப்பதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவர் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

TVK Vijay

மேலும் இக்கொடூரக் குற்றத்தில் வேறு எவரேனும் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீதும் உரிய நடவடிக்கை விரைந்து எடுக்கப்பட வேண்டும்.ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கப்படும் நிர்பயா நிதியைப் பயன்படுத்தி, பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத இடங்களைக் கண்டறிந்து, அங்கு ஸ்மார்ட் கம்பங்கள் அமைத்தல், அவசர கால பட்டன்கள், சிசிடிவி கேமரா, தொலைபேசி உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், மாநகரப் பேருந்துகள் அனைத்திலும் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்தல், பொது இடங்களில் பெண்களுக்கான கழிப்பறை வசதிகள், பெண்கள் பாதுகாப்புக்கான அவசர காலத் தொலைபேசி மற்றும் கைப்பேசிச் செயலி வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி, கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: கோவை மாநகர காவல் ஆணையராக சரவண சுந்தர் நியமனம்.. அடுத்தடுத்து நடந்த மாற்றம்!

இவை அனைத்தையும் ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இவை முழுமையாகச் செயல்படுகின்றனவா என்பதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.இவற்றைச் செய்வதில் எவ்விதச் சமரசத்திற்கும் உடன்படாமல் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். எவ்விதச் சூழலிலும் பெண்கள் மனவலிமையுடன் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வது தொடர்பாகப் போதிய சட்ட உதவி மற்றும் உளவியல் சார்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம்.

இந்த விழிப்புணர்வை, பெண்களுக்கு அவர்கள் கல்வி பயிலும் காலக்கட்டத்திலேயே அரசு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்து உள்ளார்.

  • Tom Holland and Zendaya gets engaged SPIDER MAN ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறது.. முடிவுக்கு வந்த 4 வருட டேட்டிங்!
  • Views: - 104

    0

    0

    Leave a Reply