கருத்தரித்தலை பாதிக்கும் உடற்பருமன் …. கவனிக்காவிட்டால் ஏற்படும் விளைவுகள் பெரிது!!!
Author: Hemalatha Ramkumar30 December 2024, 6:02 pm
கர்ப்பம் ஆவதற்கு திட்டமிட்டு வரும் தம்பதிகள் தங்களுடைய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான கர்ப்பத்தை உறுதி செய்வதற்கு தேவையான வகையில் உடலை கட்டுக்கோப்பாக வைப்பது அவசியம். புகைபிடிப்பதை தவிர்ப்பது, ஆரோக்கியமான மற்றும் சரிவிகித உணவை சாப்பிடுவது ஆகியவை முதல் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையில் ஒரு சில மாற்றங்களை ஏற்படுத்துவது வரை கர்ப்பத்திற்கு முயற்சிக்கும் போது பல்வேறு விஷயங்களை பின்பற்ற வேண்டும். பெரும்பாலும் கர்ப்பம் ஆவதற்கு திட்டமிட்டு வரும் தம்பதிகள் ஆரோக்கியமான எடையை பராமரிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். அது தாயாக இருந்தாலும் சரி தந்தையாக இருந்தாலும் சரி, உடல் பருமனாக இருப்பது கர்ப்பம் ஆவதற்கான வாய்ப்பை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.
உடற்பருமன் என்பது ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருவரிலுமே இனப்பெருக்கம் மற்றும் கர்ப்பத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பெண்களில் உடற்பருமன் என்பது சீரற்ற மாதவிடாய், கருமுட்டை வெளி வருவதில் சிக்கல் மற்றும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல் இதனால் கர்ப்பம் கலைதல் மற்றும் செயற்கை கருத்தரிப்பு தொழில்நுட்பங்கள் தோல்வி அடைவதற்கு காரணமாக இருக்கலாம்.
அதுமட்டுமல்லாமல் உடல்பருமன் என்பது எண்டோமெட்ரியத்தை பாதிக்கும். இதனால் தொப்புள் கொடியில் சில பிரச்சனைகள் வர சாத்தியங்கள் உள்ளன. உடற்பருமன் கொண்டவர்கள் கர்ப்பமாகும் பொழுது பிரசவத்தில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம். இவர்களுக்கு கர்ப்பம் கலைதல், சிக்கலான பிரசவம் மற்றும் குழந்தை இறந்து பிறத்தல் போன்ற பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் கர்ப்பத்தின் போது ப்ரீ எக்ளாம்ப்சியா மற்றும் பேறுக்கால டயாபடிஸ் உருவாக்கலாம்.
உடற்பருமனோடு கருத்தரிக்கும் போது குறை பிரசவம், வளர்ச்சி குறைபாடுகள், பிரசவத்தில் சிக்கல்கள் போன்ற மோசமான பிரச்சனைகள் அதிகரிக்கும். மேலும் பிரசவத்திற்கு பிறகு தாய்க்கு காயத்தில் தொற்றுகள் ஏற்படுவது மற்றும் சீழ் வைப்பது, தைராய்டு கோளாறுகள் மற்றும் அவர்களுக்கு குழந்தைகள் புத்தி சுவாதீனம் இல்லாமல் பிறத்தல் போன்ற பிரச்சனைகள் வரலாம். மேலும் உடற்பருமான பெண்களுக்கு கட்டுப்படுத்த இயலாத டயாபடீஸ் ஏற்பட்டு அதனால் பிறப்பு குறைபாடுகள் ஏற்படுவதற்கான விகிதம் அதிகமாக உள்ளது.
இதையும் படிக்கலாமே: உடலில் உள்ள கழிவுகளை அகற்றி சுத்தம் செய்ய உதவும் சீரக இஞ்சி தேநீர்!!!
உடல் பருமன் மற்றும் மலட்டுத்தன்மைக்கு இடையே உள்ள தொடர்பை ஏற்படுத்தும் ஒரு சில காரணிகள்
*அதிக அளவு இன்சுலின் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு திறன் இது PCOSல் ஒரு முக்கிய பங்கு கொண்டுள்ளது. இதனால் கருமுட்டை வெளிவரும் செயல்முறை பாதிக்கப்படுகிறது மற்றும் கருத்தரிப்பதில் சிக்கல் உண்டாகிறது.
*அதிகளவு ஃப்ரீ ஃபேட்டி ஆசிட் செல்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி, நாள்பட்ட வீக்க நிலையை உருவாக்கும்.
*ஆக்சிடேட்டிவ் அழுத்தம் செல்களை பாதித்து கருமுட்டைகளின் தரத்தை குறைத்து, கரு பதிதலில் சிக்கலை உண்டாக்குகிறது.
*லெப்டின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் வளர்ந்து வரும் கருவை பாதித்து அதனால் கர்ப்பம் கலைவதற்கு வாய்ப்பு உள்ளது.
*உடற்பருமன் டெஸ்டோஸ்டரோன் அளவுகளை குறைக்கலாம். இது ஆண்களில் மலட்டுத்தன்மை மற்றும் தாம்பத்திய உறவில் ஈடுபடுவதில் சிக்கலை உண்டாக்குகிறது. மேலும் விந்தணுக்களின் அமைப்பு, அளவு மற்றும் தரத்தையும் பாதிக்கிறது.
*விந்தணுக்களின் தரம் குறைவாக இருந்தால் அதனால் கர்ப்பம் கலைதல் மற்றும் கருவில் குறைபாடுகள் வர வாய்ப்புள்ளது.
ஆகவே உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி உணவு சார்ந்த மாற்றங்கள் போன்றவற்றில் ஈடுபடுவது உதவும். சரியான BMI பராமரிப்பது கருமுட்டை மற்றும் விந்தணுவின் தரத்தை மேம்படுத்தி, உங்களுடைய கர்ப்பத்தை ஆரோக்கியமானதாக மாற்றும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.