“பெரியார் அப்படி பேசியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது”.. அண்ணாமலை பரபரப்பு பேட்டி!

Author: Hariharasudhan
9 January 2025, 3:11 pm

பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால், அது மக்களுக்கு அருவருப்பைத் தரும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில் நடைபெற்ற மூவர் படுகொலை சம்பவத்திற்கு நீதி கேட்டு, பாஜக சார்பில் இன்று மாலை போராட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் கோவை வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், கடந்த 15 நாட்களாக திமுக அமைச்சர்கள் பல்வேறு விதமாக கருத்துக்களை தெரிவித்து வந்தனர். குறிப்பாக, அதன் இரண்டாம் கட்ட தலைவர்கள் ஞானசேகரன் திமுகவில் இல்லை எனக் கூறினர்.

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அவர் திமுகவில் இல்லை என தெரிவித்தார். இப்போது சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், ஞானசேகரன் கட்சியின் அனுதாபி எனக் கூறி தப்பிக்க முயல்கிறார். மக்களை திசை திருப்புவதற்காக இந்த வார்த்தையை அவர் பயன்படுத்தியுள்ளார்.

Annamalai about Seeman controversial speech on Periyar

இந்த விவகாரத்தில் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், காவல் ஆய்வாளர் மீது எந்த தவறும் இல்லை, அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்பட்டது. ஆனால், இப்போது எஸ்ஐடி, ஒரு அதிகாரியை கைது செய்துள்ளது. எவ்வாறு மாநில அரசு பொய்யான தகவல் அறிக்கையைக் கொடுக்க முடியும்?

மேலும், திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே மூவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை வேண்டும். அதுவே தீர்வு என இன்று பாஜக சார்பில் போராட்டம் நடத்த உள்ளோம். டங்ஸ்டன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாது என மத்திய அரசைக் கூறியுள்ளது.

மேலும், மாநில அரசு இதில் முடிவு எடுக்க வேண்டும். அதற்கு எந்த நிர்பந்தமும் இல்லை எனவும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின், அதைச் செய்யாமல் உள்ளார். மூத்த அமைச்சர்களை மதுரைக்கு அனுப்பி மக்களோடு பேசி இருந்தால், இந்த மாபெரும் ஊர்வலம் நடைபெற்று இருக்காது.

பெரியார் அவ்வாறு பேசியதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளது. அதைக் கொடுக்க தயாராக இருக்கிறேன். ஆனால், அதை இப்போது பொதுவெளியில் பேச வேண்டியதில்லை எனக் கருதுகிறேன். காரணம், பொதுமக்கள் இப்போது அரசியலை மற்றொரு கண்ணோட்டத்தில் பார்க்கத் துவங்கியுள்ளனர்.

பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால், அது மக்களுக்கு அருவருப்பைத் தரும். அதே நேரத்தில், சீமானிடம் விசாரணைக்காக காவல்துறையினர் வந்தால், பெரியார் பேசியதற்கான ஆவணங்களை வழங்கவும் தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து, கோவை, உடையாம்பாளையம் பகுதியில் சாலையோர பீப் உணவகம் நடத்தி வந்த நபர்களோடு பாஜக உறுப்பினர் வாக்குவாதம் செய்த விவகாரம் குறித்து பேசிய அண்ணாமலை, “அந்தக் காணொளியை நானும் பார்த்தேன். முழுக் காணொளியை வெளியிடாமல் பீப் குறித்து அவர் பேசிய ஒரு நிமிட வீடியோ மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.

இதற்காக பாஜக சார்பில் நடவடிக்கை எடுக்கக் கூறி, காவல்துறையினரிடமும் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் கோயிலின் அருகே மாட்டிறைச்சி உட்பட எல்லாவித அசைவ உணவுகளும் விற்க வேண்டாம் என கேட்டுக் கொண்டது. அதுவே அந்த பாஜக தொண்டரின் நிலைப்பாடாக இருந்தது.

யுஜிசி விவகாரத்தைப் பொறுத்தவரை, பிப்ரவரி 5ஆம் தேதி வரை கருத்துக்களை அனுப்ப மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, புதிய யுஜிசி விதிமுறைகளின் மூலம் பேராசிரியர்களின் பணி உயர்வுக்கான நெட் தேர்வு வேண்டாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ரீ-என்ட்ரி கொடுக்கும் நடிகை ரம்பா…ரசிகர்களுக்கு திடீர் சர்ப்ரைஸ்..!

மேலும், துணை வேந்தர் தேர்வில் ஆசிரியர் பணி மற்றும் ஆசிரியர் பணி தொடர்புடையவர்கள் நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. துணைவேந்தர் தேர்வில் யுஜிசி, பல்கலைக்கழகத்தின் செனட் மற்றும் ஆளுநர் என மூன்று தரப்பினரின் கருத்துகளும், பரிந்துரைகளும் ஏற்கப்பட்டு துணைவேந்தர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை. பிப்ரவரி 5ஆம் தேதி வரை எதிர்ப்பதற்கான கருத்துக்களை தெரிவித்து இருக்கலாம்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

  • Playback SInger P Jayachandran died இந்தப் பாடல்களெல்லாம் இவர் பாடியதா? காலத்தால் அழியாத பாடகர் ஜெயச்சந்திரனின் சுவடுகள்!
  • Views: - 91

    0

    0

    Leave a Reply