இந்த பழக்கம் இருக்கவங்களுக்கு சீக்கிரமே வயசான தோற்றம் வந்துவிடுமாம்!!!
Author: Hemalatha Ramkumar13 January 2025, 4:22 pm
வயதாகும் செயல்முறை என்பது நம்முடைய ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஏற்படக்கூடிய தவிர்க்க முடியாத ஒரு செயல்முறை. எனினும் முன்கூட்டிய வயதான அறிகுறிகள் என்பது பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஏற்படலாம். இது நம்முடைய உண்மையான வயதை விட நம்மை வயதானவர்களாக காண்பிக்கும். இதன் பின்னணியில் உள்ள உண்மை என்னவென்றால், நம்முடைய அன்றாட வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களே நாம் எவ்வாறு காட்சியளிக்கிறோம் மற்றும் எவ்வாறு உணர்கிறோம் என்பதில் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளது. ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களை பின்பற்றுவது வயதாகும் செயல்முறையை விரைவுப்படுத்துகிறது.
எனவே நாம் அன்றாடம் பின்பற்றும் பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். சமநிலையான வாழ்க்கை முறையை பின்பற்றுவது நம்முடைய ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் நன்மை தருகிறது. அந்த வகையில் நம்மை விரைவாக வயதானவர்களாக காண்பிக்கும் சில அன்றாட பழக்க வழக்கங்கள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
நீண்ட ஸ்கிரீன் நேரம்
அதிக நேரத்திற்கு மொபைல், லேப்டாப் போன்ற சாதனங்களை பயன்படுத்துவது வயதாகும் செயல்முறையை விரைவுப்படுத்துகிறது. இதனால் நமக்கு சுருக்கங்கள், மெல்லிய கோடுகள் மற்றும் வயது புள்ளிகள் ஏற்படுகிறது. இந்த சாதனங்களில் இருந்து வெளிவரும் நீல ஒளி சரும செல்களை சேதப்படுத்தி, கொலாஜன் உற்பத்தியை குறைத்து, நம்முடைய தூக்கத்தை சீர்குலைக்கிறது. இதனால் நாம் சோர்வாகவும், வயதான தோற்றத்தோடும் காட்சியளிக்கிறோம்.
தண்ணீர் பருகாமல் இருப்பது
சராசரியாக ஒருவர் ஒரு நாளைக்கு 8 கிளாஸ் தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் சரும செல்கள் சுருங்கி, அதன் நெகிழ்வு தன்மையை இழக்கும். ஆகவே உங்கள் சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும், கொலாஜன் உற்பத்தியை ஊக்குவித்து மினுமினுப்பான இளமையான சருமத்தை பெறுவதற்கு தினமும் போதுமான அளவு தண்ணீர் பருகுங்கள்.
தூக்கம் இல்லாமை
நாள்பட்ட தூக்கமின்மை என்பது முன்கூட்டிய வயதான அறிகுறிகள், கண்களுக்கு கீழ் வீக்கம், கருவளையங்கள் போன்றவற்றை ஏற்படுத்தும். தூக்கத்தின் பொழுது நம்முடைய சருமம் அதனை மீட்டெடுத்து, தன்னை சரிசெய்து கொள்ளும். ஆனால் உங்களுக்கு போதுமான அளவு தூக்கம் கிடைக்காவிட்டால் இந்த செயல்முறை பாதிக்கப்படுகிறது. இதனால் வீக்கம் ஏற்பட்டு கொலாஜன் உற்பத்தி குறைந்து சுருக்கங்களும், கோடுகளும் ஏற்பட ஆரம்பிக்கிறது.
இதையும் படிக்கலாமே: தரமான தூக்கம் வேணுமா… 10-3-2-1-0 தூக்க விதியை ஒரு மாசத்துக்கு ஃபாலோ பண்ணுங்க!!!
அதிக சர்க்கரை சாப்பிடுவது
அளவுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிடுவதாலும் சுருக்கங்களும் பொலிவிழந்த சருமமும் ஏற்படும். சர்க்கரை மூலக்கூறுகள் கொலாஜனோடு இணைந்து சருமத்தின் கட்டமைப்பு புரோட்டீன்களை சேதப்படுத்தி, வீக்கத்திற்கு வழிவகுக்கும். இதனால் வயதான தோற்றம் ஏற்படுகிறது.
புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல்
அளவுக்கு அதிகமாக புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது நம்முடைய சருமத்தை பாதிக்கும். இதனால் சருமத்தின் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் சேதமடைந்து தோலுக்கு கிடைக்க வேண்டிய ரத்த ஓட்டம் குறைந்து, வீக்கம் ஏற்பட்டு நம்முடைய சருமம் பொலிவிழந்து காணப்படுகிறது. முற்றிலுமாக தவிர்ப்பது மற்றும் மது அருந்துவதை முடிந்த அளவு குறைத்துக் கொள்வது வயதான அறிகுறிகளை குறிப்பதற்கு உதவும்.
கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.