ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழி.. சுட்டுப் பிடிக்கப்பட்ட பாம் சரவணன் யார்?
Author: Hariharasudhan16 January 2025, 12:44 pm
பிரபல சென்னை ரவுடி பாம் சரவணன், ஆந்திராவில் பதுங்கி இருந்த நிலையில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சென்னை: சென்னை, புளியந்தோப்பு அடுத்த வெங்கடேசபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (41). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை வழக்குகள், 2 வெடிகுண்டு வீசிய வழக்குகள் உள்பட 26 வழக்குகள் உள்ளன. இவற்றில் 3 கொலை வழக்குகளில் இவரை பிடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
ஆனால், பாம் சரவணன் தலைமறைவானார். இந்த நிலையில், சென்னை போலீசார் பல்வேறு இடங்களில் தனிப்படை அமைத்து, சரவணனைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், சரவணன் ஆந்திராவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். இதனையடுத்து, சித்தூர் மாவட்டம், வரதப்பாளையம் பகுதியில் ரவுடி பாம் சரவணனை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து, சென்னையின் புறநகர் பகுதியில் ரகசிய இடத்தில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ஜல்லிக்கட்டில் சாதிய பாகுபாடு…. அமைச்சர் மீது நீலம் பண்பாடு மையம் பகீர் குற்றச்சாட்டு!!
மேலும், விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கடந்த 2023ஆம் ஆண்டு, ஜூலை 5ஆம் தேதி கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு பழிக்குப் பழியாக, ஆற்காடு சுரேஷ் தரப்பினரை கொலை செய்ய பாம் சரவணன் திட்டமிடலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்த நிலையில், அவர் காவல் துறையால் சுட்டுப் பிடிக்கப்பட்டு உள்ளார்.
அதேநேரம், இந்த துப்பாக்கிச்சூடு, அவர் தப்ப முயன்ற போது காலில் சுடப்பட்டதாகவும், காவலர் ஒருவரும் இதில் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.