மாநகரின் மையப்பகுதியில் இளைஞருக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு.. திருச்சியில் பயங்கரம்!
Author: Hariharasudhan18 January 2025, 12:59 pm
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி: திருச்சி மாநகரில் மிகவும் பரபரப்பாக இயங்கக்கூடிய பகுதிகளில் ஒன்று, சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள சிந்தாமணி அண்ணா சிலை பகுதி. இந்த நிலையில், இந்தப் பகுதியில் நேற்று இரவு (ஜன.17) முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல், அங்கு நின்று கொண்டிருந்த இளைஞரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர், இது குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். இந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, படுகாயத்துடன் கிடந்த இளைஞரை மீட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வெட்டப்பட்ட இளைஞர் திருவளர்ச்சோலை பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், அவர் தனது நண்பர்கள் லோகேஷ், சஞ்சய், ராம் ஆகியோருடன் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடைபெற்ற வேடுபறி நிகழ்ச்சியை பார்க்க வந்துவிட்டு, ஸ்ரீரங்கத்தில் இருந்து சிந்தாமணி அண்ணா சிலை பகுதிக்கு நான்கு பேரும் வந்தபோது, மர்ம கும்பல் அவர்களை தாக்க முயற்சி செய்துள்ளனர்.
இதையும் படிங்க: புனிதமான திருப்பதி கோவிலில் தமிழக பக்தர்கள் செய்த அநாகரீகமான செயல்.. போலீசார் ஆக்ஷன்!
இதில், முத்துக்குமார் மட்டும் அந்த கும்பலிடம் சிக்கிக் கொண்டதால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முத்துக்குமாரிடம் விசாரித்த போது, முன்விரோதம் காரணமாக தன்னை வெட்டியதாக தெரிவித்துள்ளதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த கோட்டை போலீசார், முத்துக்குமாரை வெட்டியவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.