இறந்த தாயுடன் 9 நாட்களைக் கழித்த சகோதரிகள்.. அதிர்ச்சி காரணம்!
Author: Hariharasudhan2 February 2025, 10:00 am
ஹைதராபாத்தில், இறந்த தாய்க்கு இறுதிச் சடங்குகள் செய்ய பணமில்லாததால் 9 நாட்கள் வீட்டிலே இருந்த சகோதரிகள் மீட்கப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள ஒஸ்மானியா பல்கலைக்கழகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தவர் ராஜு. இவருக்கும், லலிதா (45) என்பவருக்கும் கடந்த 26 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ரவளிகா (24) மற்றும் யஷ்வதா (22) என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இதனிடையே, கடந்த 2020ஆம் ஆண்டில் ராஜுவுக்கும், லலிதாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் பிரிந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, லலிதா தனது வயதான தாய் மற்றும் மகள்களுடன் செகந்திராபாத் புத்தா நகரில் வசித்து வந்துள்ளார். மேலும், மூத்த மகள் துணிக்கடையிலும், இளைய மகள் தனியார் நிறுவனத்திலும் பணியாற்றி வருகின்றனர்.
எனவே, இந்த இரு மகள்களின் வருமானத்தில் தான் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்துள்ளது. இந்த நிலையில், லலிதாவின் தாய் உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்துள்ளார். மேலும், 3 மாதங்கள் வரை வீட்டு வாடகை கட்டாததால் வீட்டை காலி செய்ய, அதன் உரிமையாளர் வற்புறுத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த ஜனவரி 22ஆம் லலிதா உயிரிழந்துள்ளார். ஆனால், கையில் இறுதிச் சடங்குகள் செய்யக்கூட அவர்களிடம் பணமில்லை. இதனால், கடந்த ஒருவாரமாக பட்டினியாகவே இறந்த தாயுடன் இருந்துள்ளனர். பின்னர், ஒரு வாரம் கடந்த நிலையில், மகள்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து, ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இதையும் படிங்க: சொந்த சகோதரி மீது அலாதி காதல்.. 2 வயது குழந்தையைக் கொன்ற கொடூர அண்ணன்!
ஆனாலும், அவர்கள் இறக்கவில்லை. இதனையடுத்து, நேற்று காலை வீட்டின் கதவை திறந்து வெளியே வந்த இருவரும், பக்கத்து வீட்டாரிடம் நடந்த விஷயங்களைக் கூறி அழுதுள்ளனர். இதனையடுத்து, இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சம்பவ இடத்துக்கு வந்த செகந்திராபாத் போலீசார், லலிதாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கு முயன்றுள்ள 2 மகள்களையும் சிகிச்சைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனிடையே, இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.