நோட்டீஸில் அவதூறு? தபெதிக – நாதகவினர் கடும் மோதல்.. ஈரோட்டில் பரபரப்பு!
Author: Hariharasudhan2 February 2025, 2:50 pm
ஈரோட்டில் வாக்கு சேகரிப்பின்போது, சீமான் குறித்து அவதூறாக நோட்டீஸ் வழங்கியதாக நாதக – தபெதிகவினரிடையே மோதல் ஏற்பட்டது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு, அதற்கான பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில், திமுக வேட்பாளர் வி.சந்திரகுமார் இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக, இன்று காலை சம்பத் நகர், உழவர் சந்தை ஆகிய பகுதிகளுக்குச் சென்று, துண்டுப் பிரசுரங்கள் வழங்கி வாக்கு சேகரித்தார்.
அதேபோல், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியும் வ.உ.சி பூங்கா மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் வாக்கு சேகரித்தார். இந்த நிலையில், பன்னீர்செல்வம் பூங்காவில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சார்பில், சீமான் பற்றி அவதூறாக புகைப்படம் அச்சிட்டு விநியோகித்தாகக் கூறி, நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வாக்குவாதம் முற்றி இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, அங்கு 50க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், இருதரப்பினரையும் போலீசார் சமாதனப்படுத்தினர். இதன் காரணமாக, அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க: ஏகே 74 துப்பாக்கியால் சுட்டேன்.. அண்ணன் சொன்னாரு பாரு.. ஆக்ரோஷமாக பேசிய சீமான்!
மேலும், பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலை அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், திமுக – நாம் தமிழர் இடையே இருமுனைப் போட்டி நிலவுகிறது. இதில், திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர்.