கொள்கையில் முரண்பாடு.. இதைத்தான் செய்ய வேண்டும்.. விஜய்க்கு சரத்குமார் அட்வைஸ்!
Author: Hariharasudhan2 February 2025, 5:56 pm
பேசுவது எதுவாயினும், அதை நன்றாக யோசித்துப் பேச வேண்டும் என விஜய்க்கு சரத்குமார் அறுவுரை வழங்கியுள்ளார்.
சென்னை: நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், திமுகவை எதிர்ப்பை தனது கொள்கை எனக் கூறியுள்ளார். அதை என்னால் ஏற்க முடியாது.
இதற்கு முன் இருந்த ஆட்சியாளர்கள் மக்களுக்கு இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை. ஆனால் நான் ஆட்சிக்கு வந்தால் இதையெல்லாம் செய்வேன் என கூறுவதே ஒரு கட்சியின் கொள்கையாக இருக்க முடியும். அந்த வகையில், மக்களுக்கு விஜய் என்ன செய்யப் போகிறார் என்பதை அவர் சொல்ல வேண்டும்.
மேலும், கட்சியின் முதல் மாநாட்டில் ஆளுநர் பதவி தேவையில்லை என்று தவெக தலைவர் விஜய் பேசினார். ஆனால், அதன் பின்னர் விஜய், ஆளுநரை நேரில் சென்று பார்த்தார். எனவே, விஜய் அவரது கொள்கையில் முரண்பட்டிருக்கிறார். பேசுவது எதுவாயினும், அதை நன்றாக யோசித்துப் பேச வேண்டும் என்பதே விஜய்க்கு நான் வழங்கும் அறிவுரை” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியைத் தொடங்கிய விஜய், திமுகவை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் அறிவித்தார். தொடர்ந்து, அவர் அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை விவகாரம், வேங்கை வயல் விவகாரம் போன்றவற்றிற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்.
இதையும் படிங்க: தவெக கொடியுடன் காரில் வந்தவர்களுக்கு தர்மஅடி.. போதையில் தள்ளாடிய Ex விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!
அதேபோல், நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2025 – 2026 மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு வஞ்சனை செய்யப்பட்டு உள்ளதாக தவெக தலைவர் விஜய் கூறியிருந்தார். மேலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்த சரத்குமார், கட்சியைக் கலைத்துவிட்டு, பாஜகவில் இணைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.