அந்த சத்தம்.. அம்மாவுக்கு டீ.. அடங்காத உயிர்.. ஷோபனாவின் கண்கலங்க வைக்கும் இறுதி நிமிடம்!
Author: Hariharasudhan4 February 2025, 3:15 pm
ஷோபனா தற்கொலை செய்த நிலையிலும், நாங்கள் அவளைப் பார்க்கும்போது கடைசியில் உயிர் இருந்தது என அவரது சகோதரி கூறியுள்ளார்.
சென்னை: “அடுத்த ஒரு வருடத்திற்கு என்னைச் சுற்றியே அவள் இருப்பதுபோன்று தெரியும். நான் அவளை நினைக்கும்போதெல்லாம், அவளது ஸ்பரிசங்கள் என்னைத் தொடுவது போன்று இருக்கும். அந்த சத்தமும் எனக்கு கேட்டுக் கொண்டே இருக்கும்” எனச் சொல்லும்போதே அழுகிறார், மறைந்த நடிகை ஷோபனாவின் சகோதரி.
தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பான லொள்ளு சபா மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஷோபனா, பின்னர் வெள்ளித்திரையிலும் தடம் பதித்தார். முக்கியமாக, சில்லுனு ஒரு காதல் படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
ஆனால், எதிர்பாராத விதமாக, கடந்த 2011ஆம் ஆண்டு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தனியார் தொண்டு நிறுவனத்தில், தற்கொலை நினைப்பில் உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் செய்வதையும் தனது பணியாக வைத்திருந்த ஷோபனாவா இந்த முடிவை எடுத்தது என அவரது தாயார் மற்றும் சகோதரி எண்ணி எண்ணி கதறி அழுதுள்ளனர்.
அதிலும் குறிப்பாக, நான் தவறு செய்துவிட்டேன் என்ற குற்ற உணர்ச்சியில் ஷோபனா இறுதியில் அழுதததாகவும், அடுத்த நொடியே, தன்னுடன் சாய்த்து வைக்கப்பட்டிருந்த ஷோபனாவின் உயிர் பிரிந்ததாகவும் மனம் நொந்து கூறியுள்ளார். மேலும், வேண்டுமென்றே தனது தாயாரை வெளியே அனுப்பி வைத்ததாகவும், அப்போது நடந்த உரையாடல் இன்றும் என்னுள் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “அவள் உயிர் பிரிந்த நாளன்று, என்னுடைய அம்மாவுக்கு அவளே டீ போட்டுக் கொடுத்திருக்கிறாள். அப்போது, இனிமேல் நீ எப்போது டீ குடிக்கப் போகிறாயோ எனக் கேட்டிருக்கிறார் ஷோபனா. அதற்கு, ஏன் இப்படி பேசுகிறாய் என அம்மா கேட்டதற்கு, சும்மா பேசினேன் என ஷோபனா பதிலளித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
ஷோபனாவில் பாதிக்கப்பட்ட தாய், தன்னைவிட தனது மகளே அதிகமாக பாதிக்கப்பட்டதாகவும், அவளை அதில் இருந்து வெளியில் கொண்டு வருவதற்கு இரண்டு ஆண்டுகள் ஆனதாகவும் ஷோபனாவின் சகோதரி கூறியுள்ளார். ஏனென்றால், “அவள் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அம்மா, சேலையை அறுத்துள்ளார்.
இதையும் படிங்க: எங்க கிராமத்துக்கு விஜய் வருவாரா? ஏக்கத்தில் மக்கள் : என்ன காரணம்?
அப்போதும் அவளுக்கு உயிர் இருந்தது. ஆனால், அங்கிருந்த யாரும் உதவ முன்வரவில்லை. எனது மகள் ஆம்புலன்ஸுக்கு போன் செய்தாள். ஆனால், ஆம்புலன்ஸ் வர தாமதமானது. இருப்பினும், என்னுடைய மகள் வாயில் வைத்து ஊதினாள். நெஞ்சில் அடித்தாள், அப்போது டப் என்ற சத்தம் கேட்டது.
அதில் ஷோபனாவின் கண்கள் திறந்தது. நான் அவளது கன்னத்தில் அடித்து, ஏன்டி இப்படி பன்ன? எனக் கேட்டேன். அவள் அழுதாள். பின்னர், அவளை என்னோடு இறுக்கிப் பிடித்தேன். இதனையடுத்து, அவளது உயிர் எங்கள் மூன்று பேரின் கண்முன்னே பிரிந்தது” எனக் கண்ணீருடன் கூறியுள்ளார், ஷோபனாவின் சகோதரி.
(குறிப்பு: தற்கொலை எதற்கும் தீர்வல்ல. இதுபோன்ற எண்ணங்கள் இருப்பின், உடனடியாக தகுந்த ஆலோசனையைப் பெறவும்)