9 டேக் போன சீன்.. விடாமல் சிரித்த இளையராஜா.. கலகலத்த மேடை!

Author: Hariharasudhan
5 February 2025, 1:31 pm

மன்னன் படத்தில் உள்ள உண்ணாவிரத காட்சி 9 டேக் வாங்கியதாக இயக்குநர் பி.வாசு, ஒத்த ஓட்டு முத்தையா பட விழாவில் கலகலப்பாக பகிர்ந்துள்ளார்.

சென்னை: மன்னன் படத்தில் இடம்பெற்றிருக்கும் உண்ணாவிரதம் காட்சியில், கவுண்டமணியின் நகைச்சுவை தாங்க முடியாமல் ரஜினிகாந்த் கேமரா இல்லாத பக்கம் திரும்பி நடித்திருப்பார் என, கவுண்டமணியின் நகைச்சுவை பற்றிய சுவாரஸ்ய சம்பவத்தை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

இந்த நிலையில், அந்தக் காட்சி எடுக்கப்பட்ட தருணத்தை மேலும் விவரித்துள்ளார் இயக்குநர் பி.வாசு. இது தொடர்பாக, அவர் கவுண்டமணி நாயகனாக நடித்துள்ள ஒத்த ஓட்டு முத்தையா என்ற படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பி.வாசு அதனை நகைச்சுவையகாப் பகிர்ந்துள்ளார்.

இது பற்றி பி.வாசு பேசுகையில், “மன்னன் படத்தில் உள்ள அந்த உண்ணாவிரதம் சீனை எடுக்கவே முடியவில்லை. இதற்காக 9 டேக் போனோம். ஓகே ஷாட்டில் கூட ரஜினிகாந்த் திரும்பி சிரித்துக்கொண்டே தான் இருப்பார். நடிகர்கள் மட்டுமல்ல, ஒளிப்பதிவாளரும் அந்தக் காட்சியில் சிரிப்பார். மொழி தெரியாதவர்களையும் சிரிக்க வைக்கும் நடிகர்தான் கவுண்டமணி” எனக் குறிப்பிட்டார்.

P Vasu about Mannan comedy

மேலும், பிண்ணனி இசை மற்றும் ரீ-ரெக்கார்டிங்கில் இளையராஜா கவுண்டமணியின் நகைச்சுவைக்கு சிரித்த காட்சிகளையும் அவர் நினைவுகூர்ந்தார். இது தொடர்பாக மேடையில் பேசிய பி.வாசு, “நடிகன் படத்தில் உள்ள அந்த பிரியாணி சீனையும் எடுக்கவே முடியவில்லை.

சிரித்துக்கொண்டே இருந்தோம். அந்த பிரியாணி சீன் எடுக்கவே முடியவில்லை. அதே மாதிரி, இளையராஜா சார் வந்து ரீ-ரெக்கார்டிங்ல இப்படி ஒரு சிரிப்பு சிரிப்பார் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். அவ்வளவு சிரிப்பாரு. இளையராஜா, கவுண்டமணி சாரின் ஒரு மிகப்பெரிய ரசிகர்.

இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தலில் ‘சர்கார்’ பட சம்பவம்… பெண்ணின் வாக்கை செலுத்தியது யார்?

என்னுடைய படத்தில், நான் இளையராஜா சார் சிரிச்சி சிரிச்சி பார்த்திருக்கிறேன். அதேபோல், சிவாஜி கணேசன, ‘டேய் இது நமக்கு கிடைச்ச பாக்கியம்’ எனச் சொல்வார்” எனக் கூறியுள்ளார். ஒத்த ஓட்டு முத்தையா படத்தை இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கியுள்ளார்.

மேலும், இப்படத்தில் கஜேஷ், அன்பு மயில்சாமி, வாசன் கார்த்திக், சாய்தன்யா, ஜிவி அபர்ணா மற்றும் பிந்து ஆகியோர் நடித்துள்ளனர். இதனையடுத்து, விரைவில் இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!