சூப்பர் டூப்பர் ப்ளாக்பஸ்டர்.. விடாமுயற்சிக்கு விஜய் பட இயக்குநர் பாராட்டு மழை!
Author: Hariharasudhan6 February 2025, 4:06 pm
விடாமுயற்சி படம் சூப்பர் டூப்பர் ப்ளாக்பஸ்டரக வந்துள்ளதாக இயக்குநர் வெங்கட் பிரபு எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.
சென்னை: இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம், விடாமுயற்சி. இப்படம், இன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை, அஜித் ரசிகர்கள் தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.
மேலும், இப்படத்திற்கு முதலில் நேர்மறையான விமர்சனங்கள் வந்த நிலையில், தற்போது கலவையான விமர்சனங்களையும், சமூக வலைத்தளப் பதிவுகளிலும், ரசிகர்களின் நேரடி பேட்டிகளிலும் காண முடிகிறது. மேலும், த்ரிஷா, ரெஜினா, அனிருத் போன்ற படக்குழுவினரும் நேரடியாக தியேட்டர்களில் ரசிகர்களுடன் படத்தைப் பார்த்தனர்.
இந்த நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு, “விடாமுயற்சி படம், அதன் தன்மைக்கு ஏற்ப உருவாக்கப்பட்டு உள்ளது. ஒரு சராசரி மனிதனாக அஜித் நடித்திருப்பது அருமையாக இருக்கிறது. ஆனால், படத்தில் செம சர்ப்ரைஸாக அமைந்தது அர்ஜூனும், ரெஜினாவும்தான். படக்குழுவுக்கு எனது பாராட்டுகள். சூப்பர் டூப்பர் ப்ளாக்பஸ்டர்!” என மகிழ்ச்சி பொங்க பதிவிட்டு உள்ளார்.
அஜித்தின் 50வது படமான மங்காத்தா படத்தை இயக்கி, சூப்பர் டூப்பர் ப்ளாக்பஸ்டராக கொடுத்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு. இப்படத்தில் தான், முதல் முறையாக அஜித்தும், அர்ஜுனும் ஒன்றாக நடித்தனர். மேலும், கடந்த 2005ஆம் ஆண்டு அஜித்குமார் நடிப்பில் வெளியான ஜி படத்தில், வெங்கட் பிரபு அஜித்தின் நண்பராக நடித்திருப்பார்.
இதையும் படிங்க: மதம் மாறுவதை தவிர வேறு வழியில்லை.. திருமா பரபரப்பு கருத்து!
மேலும், இவரது இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் தி கோட். விஜய் கதாநாயகனாக நடித்த இப்படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு வெளியான இந்தப் படம், வணிக ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.