கலாசாரச் சீர்கேடா பிக்பாஸ்? திடீரென ஆவேசமான ரஞ்சித்!
Author: Hariharasudhan10 February 2025, 12:43 pm
பிக்பாஸ் கலாசாரச் சீர்கேடு போன்று எனக்குத் தெரியவில்லை என்றும், நான் அதில் பயணித்து வந்துள்ளேன் எனவும் நடிகர் ரஞ்சித் கூறியுள்ளார்.
ஈரோடு: ஈரோட்டில் கால்நடை கண்காட்சி நடைபெற்றது. இதில், நடிகரும், பிக்பாஸ் பிரபலமான ரஞ்சித் கலந்து கொண்டு, கண்காட்சியை பார்வையிட்டார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சித், “பொருளாதார ரீதியில் நாம் நாட்டு மாடுகளை தவிர்த்து வரும் நிலையில், நாட்டு மாட்டு பாலில் உள்ள நுண்ணியிர்கள் வேறு எந்தப் பாலிலும் இல்லை.
பாலை மருந்தாக எண்ணி, அனைவரும் ஒவ்வொரு வீட்டிலும் நாட்டு மாட்டை வளர்த்திட வேண்டும். நடிகர் விஜய், தனது வருமானத்தை விட்டுவிட்டு, பொது வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். வாக்கு என்பது தமிழ்நாடு அரசியலில் மிகவும் முக்கியம். யார் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வந்தாலும், அவர்களை நாங்கள் மனதார வரவேற்கிறோம்.
மக்கள் நலனுக்காக அனைவரும் அரசியல் களத்திற்கு வருவது நன்று. பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சார சீர்கேடு மாதிரி எனக்கு தெரியவில்லை. ஆனால், வெளியில் இருக்கும்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த எண்ணங்கள் எனக்கு வேறுமாதிரிதான் இருந்தது. ஆனால், நான் ஒரு போட்டியாளராகச் சென்று வந்துள்ளேன், நன்றாகத்தான் உள்ளது.
ஆசிரியர்கள், மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்வது மிகவும் வருத்தமாக இருக்கிறது. அனைத்து பெற்றோரும் பள்ளியில் மாற்று பெற்றோர்களாக இருக்கும் ஆசியர்களை நம்பி விடும்போது, அவர்களே கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மனித மனங்களில் நாம் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். துபாய் போன்ற வெளிநாடுகளில் இருப்பது போன்ற கடுமையான தண்டணைகள் இருந்தால் மட்டுமே இதுபோன்று நடக்காது.
இதையும் படிங்க: வடகரா HIT & RUN வழக்கு.. கோமாவில் சிறுமி : ஒரு வருடம் கழித்து குற்றவாளி கைது..சிக்கியது எப்படி?
தமிழ்நாடு இயங்குவது பெண்களால்தான். நாங்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை என பெண்கள் பணி செய்து வருகின்றனர். பேருந்துகள், ரயில்களில் பாலியல் சம்பவங்கள் அதிகமாக நடக்கின்றன. இது போன்ற சம்பவங்கள் ஒழிய தண்டனைகள் கொடூரமாக இருக்க வேண்டும். குற்றவாளிக்கு வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற பயம் இருக்கும் அளவிற்கு தண்டனை இருந்தால்தான், பாலியல் குற்றங்களைத் தடுத்து நிறுத்த முடியும்” எனத் தெரிவித்தார்.